சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் விதமாக உருவாகியுள்ள படம் தி ராஜா சாப். இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது நடிகர் பிரபாஸ், சீதா ராமம் புகழ் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பாவ்ஜி என டைட்டில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பும் அவ்வப்போது நடை பெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பிரபாஸின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதில் அவர்கள் கூறும்போது, “நாங்கள் பிரபாஸ், ஹனு ராகவபுடி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை மிக உயரிய தரத்தில் ரசிகர்களுக்காக கொடுப்பதற்கு உழைத்து வருகிறோம். இந்த படக்குழுவினர் அனைவரும் தங்களது கடின உழைப்பை கொடுத்து வருகிறார்கள். அந்த உழைப்பை அவர்களது உறுதியை குலைக்கும் விதமாக படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமீபகாலமாக சிலர் சோசியல் மீடியாவின் பகிர்ந்து வருகின்றனர். இது போன்று செய்பவர்கள் மீது சைபர் கிரைம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.