பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், ஏடு தந்தானடி தில்லையிலே... என பக்தி மனம் கமழும் அற்புத பாடல்களை தந்த பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன், 90, வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் 'முருகவேல் காந்தி'. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து... பூவை செங்குட்டுவன் என்ற பெயர் கொண்டார்.
1967 முதல் பாடல்கள் எழுதி வந்தார். பெரும்பாலும் பக்தி பாடல்கள் எழுவதில் தான் இவர் வல்லவர். ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
பல்துறையில் வித்தகரான இவரின் மறைவு தமிழ் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு பூவை தயா, ரவிச்சந்திரன் என்ற இரு மகன்களும், கலை செல்வி, விஜய லக்ஷிமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.