மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
47 minutes ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
47 minutes ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
47 minutes ago
முருகன் பக்தி பாடல்கள் என்றால் இந்த பாடலை யாரும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. மக்கள் நெஞ்சங்களில் 50 ஆண்டுக்கு மேல் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த பாடல் 'கந்தன் கருணை' படத்தில் இடம் பெற்ற திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலாகும். அதேப்போல் திரையிசை ரசிகர்கள் கொண்டாடும், குறிப்பாக எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு பெற்ற இந்த பாடலையும் யாரும் மறக்க மாட்டார்கள். அது 'புதிய பூமி' படத்தில் வரும் ‛நான் உங்கள் வீட்டுப்பிள்ளை' பாடல். இப்படி ஏராளமான ஆன்மிக மற்றும் திரையிசை பாடல்களை தந்தவர் பூவை செங்குட்டுவன்(90). வயது மூப்பு, உடல்நலப் பிரச்னையால் சென்னையில் இன்று(செப்., 5) காலமானார். அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
வாழ்க்கை பயணம்...
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி என்ற கிராமத்தில் ராமையா அம்பலம் - லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாய் பிறந்தவர் பூவை செங்குட்டுவன். இவரின் நிஜப்பெயர் 'முருகவேல் காந்தி'. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து... பூவை செங்குட்டுவன் ஆனார்.
குன்னக்குடி நட்பு
வயலின் கலைஞர் மற்றும் இசையமைப்பாளரான குன்னக்குடி வைத்தியநாதன் இவரின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் எழுதிய பல கதை, வசனங்களை வைத்து பல நாடகங்களை தயாரித்து, இசையமைத்து, இயக்கினார் குன்னக்குடி. அந்த நாடகங்களுக்கு அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஏபி நாகராஜன், கொத்தமங்கலம் சுப்பு போன்றோர் தலைமை தாங்கி உள்ளனர்.
சோதனைகள் பல
பல சோதனைகளை சந்தித்த செங்குட்டுவன் மனம் வருந்தி தான் எழுதிய கதைகள், நாடகங்கள், பாடல்களை தீயிட்டு கொளுத்திட முயன்றார். அப்போது கல்யாணமய்யர் என்பவர் அழைப்பின் பேரில் வந்த ஒருவர், கவிஞரே, நீங்கள் எழுதித் தந்த எட்டு நாடகங்களையும் ரிக்கார்டிங் செய்து விட்டோம் என்று கூறி அதற்கான பணத்தைக் கொடுத்தார். இந்நிகழ்வு அவர் வாழ்வில் ஒளி ஏற்றியது. இதன் பின்னர் ஹிந்தி மெட்டுக்கு நூறு பாடல்களை இசையை கேட்டமாத்திரத்தில் மூன்றே நாளில் எழுதிக் கொடுத்தார்.
திருப்பம் தந்த திருப்பரங்குன்றம் பாடல்
பூனை செங்குட்டுவனிடம் குன்னக்குடி பக்திப் பாடல்களை எழுதித் தருமாறு கேட்டார். அவர் மீது கொண்ட நட்பால் பக்தி பாடல்கள் எழுதினார். அதுதான் 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' மற்றும் 'ஆடுகின்றானடி தில்லையிலே' பாடலாகும். இந்த இரண்டு பாடல்களும் அமோக விற்பனையையும் வரவேற்பையும் பெற்றது. ஒரு விழாவில் இறை வணக்க பாடலாக சூலமங்கலம் சகோதரிகள் பாட அந்த விழாவிற்கு வந்த ஏபி நாகராஜன், ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசன் ஆகியோர் மெய் மறந்து ரசித்தனர். பின்னர் கண்ணதாசனின் யோசனையின் பேரில் இந்த பாடலை கந்தன் கருணை படத்தில் வைத்தனர்.
பன்முக கலைஞர்
தொடர்ந்து சினிமாவில் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களை எழுதி உள்ளார். பகுத்தறிவு கொள்கை உடைய இவர் பெரும்பாலும் பக்தி பாடல்களில் தான் அதிக கவனம் பெற்றார் என்பது தனிச்சிறப்பு. படங்களுக்கு கதை, திரைக்கதையும் எழுதி உள்ளார். நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்களிலும் தனது பங்களிப்பை செய்து பன்முக திறமையாளராக இருந்தார்.
இசைப்பாடலாக திருக்குறள்
திருக்குறளில் 133 அதிகாரத்தையும் எளிய நடையில் இசைப்பாடலாக (133 பாடல்கள்) தந்தவர் இவர் ஒருவரே. இதனை பாராட்டி மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு பாராட்டு மடல் அனுப்பினார். அந்த இசைப் பாடல் 'குறள் தரும் பொருள்' என்ற இசைப் பேழையாக இளையராஜா வெளியிட்டார்.
விருதுகள்
கலைமாமணி விருது
கண்ணதாசன் விருது
2010- கவிஞர்கள் திருநாள் விருது
2021- மகாகவி பாரதியார் விருது
அவர் எழுதிய முக்கிய பாடல்கள்
* திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - 'கந்தன் கருணை'
* திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்... - 'கெளரி கல்யாணம்'
* வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் இருக்குதடி... - 'கற்பூரம்'*
* நான் உங்கள் வீட்டுப்பிள்ளை... - 'புதிய பூமி'
* நான்தான்டி காத்தி நல்லமுத்து பேத்தி... - 'புதிய பூமி'
* இறைவன் படைத்த உலகையெல்லாம்... - 'வா ராஜா வா'
* குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா... - 'திருமலை தென்குமரி'
* வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே... - 'காதல் வாகனம்'
* தாயின் சிறந்த கோயிலுமில்லை... - 'அகத்தியர் '
* ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே... - ‛கனிமுத்து பாப்பா'
* காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்... - 'பெத்த மனம் பித்து'
* எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி... - 'மச்சானைப் பாத்திங்களா'
* தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை கண்டது யார்... - 'வடிவங்கள்'
* வானம் நமது தந்தை பூமி நமது அன்னை... - 'தாகம்'
* எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்துக்கூட்டி பாடி வந்தேன்... - 'குமஸ்தாவின் மகள்'
* காலம் செய்யும் விளையாட்டு இது கண்ணாமூச்சி விளையாட்டு... - 'குமஸ்தாவின் மகள்'
* முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்... - 'மேல் நாட்டு மருமகள்'
* ஏடு தந்தானடி தில்லையிலே... - 'ராஜ ராஜ சோழன்'
* காலம் எனக்கொரு... - ‛பௌர்ணமி'
* திருநெல்வேலி சீமையிலே... - ‛திருநெல்வேலி'
47 minutes ago
47 minutes ago
47 minutes ago