உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்”

பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்”


சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து, கலையுலகில் கால் பதித்து, கடின உழைப்பு, தன்னம்பிக்கை என்ற இரண்டை மட்டுமே மூலதனமாக்கி, திரைத்துறையில் முன்னேறி, தனது ரசிகர்களால் 'தல' என அன்பாகவும், மரியாதையாகவும் அழைக்கப்படுபவர்தான் நடிகர் அஜித்குமார்.

“அமராவதி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து “பாசமலர்கள்”, “பவித்ரா”, “ராஜாவின் பார்வையிலே”, “கல்லூரி வாசல்” போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த வேளையில், இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் வெளிவந்த “ஆசை” திரைப்படம்தான் இவர் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற முதல் திரைப்படம் என்ற அந்தஸ்தை இவருக்குப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து “காதல் கோட்டை”, “காதல் மன்னன்”, “அவள் வருவாளா” போன்ற திரைப்படங்கள் இவருக்கென ஒரு தனித்துவத்தை தமிழ் திரையுலகில் உருவாக்கியிருந்த நிலையில், இயக்குநர் எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த “வாலி” திரைப்படம் நடிகர் அஜித்தின் கலைப்பயணத்தில் ஒரு மாபெரும் திருப்பத்தைத் தந்த திரைப்படமாக அமைந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக வந்த “அமர்க்களம்” திரைப்படம்தான் இவரது கலையுலக மற்றும் தனி வாழ்வில் ஒரு அமர்க்களத்தை உண்டு பண்ணிய திரைப்படமாக வெளிவந்து, நடிகர் அஜித்தின் வேறொரு பரிமாணத்தை வெள்ளித்திரை ரசிகர்கள் முன் காட்டியது. நடிகர் அஜித்குமாரின் 25வது திரைப்படம் என்ற அங்கீகாரத்தோடு, 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த இத்திரைப்படம், 'வெங்கடேஸ்வராலயம்' என்ற தயாரிப்பு நிறுவனத்திற்காக, இயக்குநர் சரண் இயக்கத்தில், 1998ம் ஆண்டு நடித்துக் கொடுத்த தனது “காதல் மன்னன்” திரைப்படத்திற்குப் பின் அதே கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படமாக வெளிவந்ததுதான் இந்த “அமர்க்களம்”.

இயக்குநர் சரண் பார்த்து ரசித்த ஒரு படத்தின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான் இத்திரைப்படத்தின் கதை என்றாலும், முற்றிலும் நாயகனை மையப்படுத்தியே கதை சுற்றிச் சுழலுவதாகவே படத்தை இயக்கியிருப்பார் இயக்குநர் சரண். இப்படத்தின் நாயகியாக இயக்குநர் சரணின் தேர்வாக இருந்தவர் நடிகை ஜோதிகா. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க இயலாமல் போக, இயக்குநரின் அடுத்த தேர்வாக இருந்தவர்தான் நடிகை ஷாலினி. “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தின் வெற்றிக்குப் பின், நடிகை ஷாலினி தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் தனக்கான பிம்பத்தைக் கட்டமைத்திருந்த நிலையில்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

அதேபோல் வழக்கமான வில்லன் கதாபாத்திரத்திலிருந்து விலகி, சற்று வித்தியாசமான ஒரு எதிர்மறை கதாபாத்திரமான 'துளிசிதாஸ்' என்ற கதாபாத்திரத்திற்கு இயக்குநர் சரண் தேர்வு செய்து வைத்திருந்தவர் நடிகர் அமிதாப்பச்சன். பின்னர் அவரும் இத்திட்டத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட, நடிகர் ரகுவரன் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் இடிக்கப்பட்ட, சென்னை மேற்கு மாம்பளத்தின் அடையாளமாக இருந்து, 55 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த “ஸ்ரீநிவாசா தியேட்டர்” என்ற சினிமா தியேட்டரில்தான் பெரும்பாலான “அமர்க்களம்” திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.

அஜீத் மற்றும் ஷாலினி ரீல் வாழ்க்கையிலிருந்து ரியல் வாழ்க்கையிலும் மனம்கவர் தம்பதியராக இணைய காரணமான திரைப்படமாகவும் அமைந்ததுதான் இந்த “அமர்க்களம்” திரைப்படம். ஆகஸ்ட் 15, 1999ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், நடிகர் அஜித்குமாரின் கலையுலக வாழ்விலும், அவரது தனி வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒரு தனி இடத்தைப் பிடித்து, தரமான வெற்றியையும் ஈட்டித் தந்தது இந்த “அமர்க்களம்”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !