புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள்
தமிழ் சினிமாவில் இப்போது ஒரு புது டிரெண்ட் உருவாகியுள்ளது. புதிய படங்களில் இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களைப் பயன்படுத்துவதுதான் அந்த டிரென்ட். பொருத்தமான இடங்களில் வரும் அந்தப் பாடல்கள் படத்துக்கே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. பலரும் இளையராஜாவிடம் முறையான அனுமதி பெற்று அப்பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு சிலர் அனுமதி பெறாமல் பயன்படுத்தி பின்னர் நீதிமன்ற வழக்கு, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன் நடித்து நேற்று வெளியான 'தண்டகாரண்யம்' படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த இரண்டு பழைய பாடல்களைப் படத்தில் பயன்டுத்தியுள்ளார்கள்.
கலையரசன், வின்சு சாம் இடையிலான காதல் காட்சியில் 1989ல் வெளிவந்த 'இதயத்தை திருடாதே' படத்தில் இடம் பெற்ற 'ஓ ப்ரியா ப்ரியா' பாடலையும், பின்னர் ஒரு முக்கியமான காட்சியில், 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' படத்தில் இடம் பெற்ற 'மனிதா மனிதா' பாடலையும் பயன்படுத்தி உள்ளார்கள்.
தினேஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடல் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடல்தான் அப்படத்திற்கே ஒரு அடையாளத்தைத் தந்து பெரும் வெற்றியைப் பெற வைத்தது.