எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம்
தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகளும் வழங்கப்படுகின்றன. தற்போது, 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறும் திரைத்துறை பிரபலங்களின் பட்டியல் இங்கே...
2021ல் விருது பெறும் திரைத்துறையினர்
2021ம் ஆண்டு திரைத்துறை சார்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குனர் லிங்குசாமி, பைட்மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், சின்னத்திரை நடிகர் கமலேஷ் ஆகியோர் கலைமாமணி விருது பெறுகின்றனர்.
2022 கலைமாமணி விருது
2022ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, சின்னத்திரை நடிகை ‛மெட்லி ஒலி' காயத்ரி ஆகியோர் விருது பெறுகின்றனர்.
2023 கலைமாமணி விருது
2023ம் ஆண்டு நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ்மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சினிமா, சின்னத்திரை மட்டுமல்ல, நாட்டுப்புற கலைஞர்கள், பாடகர், எழுத்தாளர்கள், சிற்பி போன்றவர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜேசுதாஸிற்கு கவுரவம்
ஒவ்வொரு ஆண்டும் 30பேர் என 3 ஆண்டுகளுக்கு மொத்தம் 90 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களை தவிர, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருதுக்கு பாடகர் ஜே.ஜே.ஜேசுதாஸ் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடக்கும் விழாவில் முதல்வர் இவர்களுக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தவுள்ளார். கலைமாமணி விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்படுகிறது.
கோடான கோடி நன்றி - எஸ்ஜே சூர்யா
எஸ்ஜே சூர்யா வெளியிட்ட அறிக்கையில், ‛‛என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
லிங்குசாமி நன்றி
எனக்கு கலைமாமணி அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‛‛இந்த விருது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கும் அன்னையின் முத்தம் என நினைத்துக் கொள்ளுங்கள் என்று கருணாநிதி கட்டுரை எழுதி இருந்தார்''. அது இன்னும் என் நினைவில் உள்ளது. என்னுடன் பயணித்த நடிகர்கள், நண்பர்கள், டெக்னீசியன்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் மகிழ்ச்சி இன்னும் நாம் வேலை செய்யணும் என்ற உந்துதலை தருகிறது. இன்னும் நான் போய் சேர வேண்டிய தூரம் நிறைய இருக்கு என உணர வைக்கிறது. முதல் வாய்ப்பு தந்த ஆர்பி சவுத்ரிக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.