புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்'
எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடிக்கும் படம் 'ஜன நாயகன்'. இப்படம் 2026ம் வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படம் வெளியாக உள்ளது.
தமிழில் ஒரே ஒரு போட்டி, அதுவும் சில நாட்களுக்குப் பிறகுதான் என்றாலும் ஒரு பெரும் போட்டியை மற்ற மொழிகளில் 'ஜன நாயகன்' படம் சமாளிக்க வேண்டி இருக்கிறது. தெலுங்கில் ஜனவரி 9ம் தேதி பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' வெளியாகிறது. நேற்றே அப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டுவிட்டார்கள். அந்தப் படம் தவிர, சிரஞ்சீவி நடிக்கும், 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படமும், நவீன் பொலிஷெட்டி நடிக்கும் 'அனகனகா ஒக ராஜு' படமும் சங்கராந்திக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் 'ஜன நாயகன்' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் கண்டிப்பாக இருக்கும். கர்நாடகாவில் வேண்டுமானால் ஓரளவிற்கு சமாளிக்கலாம். 'ஜன நாயகன்' படத்தைத் தயாரிப்பது கன்னட தயாரிப்பு நிறுவனம். எனவே, அவர்கள் எப்படியாவது நல்ல தியேட்டர்களைப் பெற்று விடுவார்கள். இருந்தாலும் விஜய்யை விட பிரபாஸ் பான் இந்தியா நடிகர் என்பதால் அவருக்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும்.
மேலும், விஜய் அரசியலில் இறங்கிய பிறகு தமிழில் உள்ள ரஜினிகாந்த், அஜித், சூர்யா என பலரது ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக சண்டை போட்டு வருகிறார்கள். இதனால், அவர்கள் விஜய் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்களா என்பதும் சந்தேகம்தான். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மறைவுக்கு விஜய் மீது மக்களின் கோபம் உள்ளது. அதனால், கடந்த வாரம் வெளியான 'குஷி' படத்தின் ரிரிலீஸ் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலி 'ஜன நாயகன்' படத்திற்கும் வரலாம்.