காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு
ராஞ்சனா, அட்ரங்கி ரே படங்களுக்கு பின் நடிகர் தனுஷ், இயக்குனர் ஆனந்த் எல் ராய், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகி உள்ள மூன்றாவது ஹிந்தி படம் ‛தேரே இஷ்க் மே'. கிர்த்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இதன் டீசரை தமிழ், ஹிந்தியில் வெளியிட்டுள்ளனர்.
தந்தையின் இறுதிச்சடங்கை முடித்து வரும் தனுஷ், திருமணத்திற்கு தயாராகும் கிர்த்தியிடம் உனக்கு கங்கா தீர்த்தம் கொண்டு வந்துள்ளேன். பழைய பாவத்தை கழித்து விட்டு போ என கூறி கங்கை நீரை உற்றுகிறார். பின்னணியில் இவர்கள் காதலர்களாகவும், ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்துவிட்டார்கள் என்பது தெரிகிறது. டீசரை பார்க்கையில் முழுக்க முழுக்க இது காதல் கதை என தெரிகிறது. காதலில் தோற்றவனின் வழியை இப்படம் பேசும் என புரிகிறது.
படத்தின் டீசரை பகிர்ந்து கிர்த்தி சனோன் வெளியிட்ட பதிவில், ‛‛காதலில் வாழ்வோர் பலர் ஆனால் அதில் கரைபவர் வெகு சிலரே. சங்கர் மற்றும் முக்தியின் காதல் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ஆனந்த் எல் ராய் கூறியதாவது, காதல் என்றால் முழுமையான சரணாகதி. அது உங்களை குணப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், மாற்றட்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த காதல் படம் 2025 நவம்பர் 28 அன்று, ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.