விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான்
சென்னையில் நடந்த, அபிராம் வர்மா, சனா நடிக்கும் 'மெளனம்' பட பூஜையில் சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''நான் இட்லிகடை படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தேன். ஏன் கவுரவ வேடம் என்று கேட்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து எனக்கும் தனுசுக்கும் சண்டை இருந்தது. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் அவர் நடிக்க இருந்த கேரக்டரில் நான் நடித்தேன்.
'ஆடுகளம்' படத்தில் கூட நான்தான் நடிக்க வேண்டியது. 'சூதாடி' படத்தில் நானும், அவரும் இணைந்து நடித்தோம். ஆனால், படப்பிடிப்பு தொடரவில்லை. அந்த பாசத்தில் இட்லிகடை படத்தில் நடித்தேன். அந்த கேரக்டருக்கு நல்ல வரவேற்பு. அடுத்து என் மகன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறேன். அவர் நெல்சன், லோகேஷ் கனகராஜ் மாதிரி பெரிய படம் பண்ணப்போகிறார். இப்போது பெரிய படங்களில் எனக்கு சின்ன ரோல் கொடுக்கிறார்கள். என் பையன் படத்திலும் சின்ன ரோல். அதற்காக தயாரிப்பாளரை தேடிக்கொண்டு இருக்கிறோம். என் மகன் படத்தில் நடிப்பது பெருமை.
சினிமாவில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை. மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். நான் கூட பார்த்திபன் மனிதநேய மன்றம் தொடங்கினேன். சோத்துகட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன். ஆனால், அரசியல் வேறு களம். நல்லது செய்ய நினைத்தால் மனசு இருந்தால்போதாது. பணம், பவர் வேணும். இப்போது விஜய் வருகிறார். அது நல்ல விஷயம்தான். பலர் வர வேண்டும். அப்போதுதான் அது நன்றாக இருக்கும், நான் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசவில்லை. கரூர் சம்பவத்தால் பல கருத்துகள், அந்த விவகாரத்தால் அவரை கைது செய்யணுமா என்று கேட்கிறார்கள். அதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி இருக்கிறார். இப்படி பேசுவது அத்துமீறல். 2026ல் நான் அரசியலுக்கு வரவில்லை. 'நான்தான் சிஎம்' என்ற படம் எடுக்கப்போகிறேன்'' என்றார்.