பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி
1953ம் ஆண்டு வெளிவந்த படம் 'பணக்காரி', கே.எஸ்.கோபாலகிருணன் இயக்கிய இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர், வி. நாகையா, 'ஜாவர்ட்' சீதாராமன், டி.ஆர். ராஜகுமாரி, சி.வி.வி. பந்துலு, டி.எஸ்.துரைராஜ், கே.ஆர். செல்லம், டி.எஸ்.ஜெயா மற்றும் கே.ஏ.தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்தனர்.
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய 'அன்னா கரெனினா' என்ற நாவலை தழுவி இந்தப் படம் உருவானது. பணக்கார பெண் ஒருத்தி திருமணமான நிலையில் கணவனை தவிர்த்து இன்னொரு ஆணுடன் நட்பாக பழகுவதால் குடும்பத்திற்குள் வரும் பிரச்னைகளை பேசிய படம். இந்த படத்தில் பணக்கார பெண்ணாக டி.ஆர்.ராஜகுமாரியும், அவரது கணவராக நாகய்யாவும், அவர் நட்பாக பழுகும் ராணுவ அதிகாரியாக எம்ஜிஆரும் நடித்தனர். ஒருவனின் மனைவி இன்னொரு ஆணுடன் பழகக்கூடாது என்று கருத்து அப்போது வலுவாக இருந்ததால் படம் பெரிய தோல்வியை தழுவியது.
இந்த படம் வெளிவருதற்கு முன்பு 'ஜீவிதநுகா' என்ற மலையாள படம் தமிழில் 'பிச்சைக்காரி' என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது. கே.வேம்பு இயக்கிய இந்த படத்தில் திக்குரிச்சி சுகுமாறன் நாயரும், பி.எஸ்.சரோஜாவும் நடித்திருந்தனர். இந்த படம் தமிழிலும் வெற்றி பெற்றது.
இதனால் சினிமா வியாபார வட்டத்தில் 'பணக்காரியை வாங்கிய விநியோகஸ்தர்கள் பிச்சைக்காரர் ஆனார்கள். பிச்சைக்காரியை வாங்கிய விநியோகஸ்தர்கள் பணக்காரர் ஆனார்கள்' என்ற விமர்சன வாசகம் இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது.