உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால்

வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால்


நடிகை காஜல் அகர்வால், தமிழில் கடைசியாக கமல் நடித்த ‛இந்தியன் 2' படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் இவரது காட்சிகள் இடம்பெறாமல், 3ம் பாகத்திற்கான முன்னோட்டத்தில் இடம்பெற்றிருந்தார். 'இந்தியன் 3' படத்தில் இவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் எனக்கூறப்படும் நிலையில், அப்படத்தின் மீதமுள்ள சில காட்சிகளை எடுப்பதில் இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் மற்றும் தயாரிப்பு தரப்புக்கு இடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை. இதனால் அப்படம் வெளிவருமா என்பது சந்தேகம்.

அடுத்து ஹிந்தியில் ‛சிக்கந்தர்', தெலுங்கில் ‛கண்ணப்பா' படங்களில் சிறிய தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தவெக பிரசாரத்தின்போது கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛எல்லாரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக கருத்து கூற மாட்டேன். அது வேறு களம்'' என்றார்.

மேலும் விஜய் குறித்து பேசிய அவர், ‛‛விஜய்யுடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகை'' என்றார். தமிழில் அடுத்து எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, “மிக விரைவில் நடிப்பேன்” என பதிலளித்தார். பின்பு கோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு, “பெரிய வித்தியாசங்கள் இல்லை. மிகவும் கிரியேட்டிவாகவும் தொழில்முறையாகவும் இரண்டு துறைகளுமே இருக்கிறது. நான் தென்னிந்தியாவில் இருந்து என்னுடைய கரியரை துவங்கியதால் கோலிவுட் என்னுடைய மனதில் ஸ்பெஷல் இடத்தில் இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் விபத்தில் இறந்ததாக சமீபத்தில் வதந்தி பரவியது. இதற்கு அவர் மறுப்பும் தெரிவித்தார். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛வதந்திகளில் நான் கவனம் செலுத்துவதில்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !