நடிகை மாளவிகா மோகனன் மலையாள திரையுலகில் இருந்து தமிழில் நுழைந்து ‛பேட்ட, மாஸ்டர்' படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகை வரிசைக்கு உயர்ந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தற்போது தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலா காரணங்களுக்காக அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டு வருகிறார் மாளவிகா மோகனன். அப்படி அவர் அதிகமாக பயன்படுத்துவது இண்டிகோ விமான சேவையை தான். ஆனால் எப்போதுமே அவர்களது விமானம் புறப்பாடு தாமதமாகத்தான் இருக்கிறது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் மாளவிகா மோகனன்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் இண்டிகோ விமான சேவையில் பத்துக்கு ஒன்பது விமானங்கள் எப்போதுமே தாமதமாகின்றன? விமானத்திற்குள் பயணிகளை அனுமதித்து அவர்களை உட்கார வைக்கிறோம் என்கிற பெயரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தும் புதிய ட்ரெண்டை உருவாக்குகிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு விமானம் புறப்பட தாமதம் என்று அறிவிப்பு வந்தால் பயணிகளை விமானத்தில் அனுமதித்து அமர வைக்கும் அந்த வேலையையும் கொஞ்ச நேரம் கழித்து தாமதமாகவே செய்யலாமே ?” என்று கேள்வி எழுப்பி உள்ளார் மாளவிகா மோகனன்.