உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம்

மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம்


மலையாள திரையுலகைச் சேர்ந்தவர் நடிகை ரீமா கல்லிங்கல். தமிழில் பல வருடங்களுக்கு முன்பு பரத் நடித்த 'யுவன் யுவதி' என்கிற ஒரே படத்தில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தவர், இயக்குனர் ஆசிக் அபு என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போதும் செலெக்ட்டிவான படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்கும் பாதிப்புகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர், அந்த பிரச்னைகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறார்.

குறிப்பாக மீ டு பிரசாரம் சூடுபிடித்த சமயத்தில் அந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை ஒரு பிடி பிடித்தார். இந்த நிலையில் ஆச்சர்யமாக அப்படி மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் சஜின் பாபு என்பவரது படத்தில் தற்போது கதாநாயகியாக நடிக்கிறார் ரீமா கல்லிங்கல். இது உங்களுக்கே முரணாக தெரியவில்லையா என்று சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த ரீமா கல்லிங்கல் இந்தப்படத்தில் நடிக்க என் சுயநலம் தான் காரணம் என்று பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் உண்மையிலேயே சுயநலக்காரி தான். எனக்கு இந்த படம் தேவைப்படுகிறது. நான் ஒரு நடிகையாக என் வேலையை செய்தே ஆக வேண்டும். அதுதான் முதல் காரணம். இதுவே நான் ஒரு இயக்குனராக அல்லது தயாரிப்பாளராக இருந்திருந்தால் நிச்சயமாக இது போன்ற நபருடன் இணைந்து பணியாற்ற விரும்ப மாட்டேன். அதற்கு பதிலாக வேறு நபரைத் தான் தேர்வு செய்வேன்.

அது மட்டுமல்ல குற்றச்சாட்டுக்கு ஆளான நபரே அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் கூட இந்த விஷயத்தில் இருந்து நகர்ந்து விட்டார். தவிர இந்த இயக்குனருடன் பேசியபோது தான் இந்த விஷயத்தில் இன்னும் பல கோணங்கள் இருப்பது எனக்கு தெரிய வந்தது” என்று தன்னுடைய இந்த முடிவுக்கு சப்பைக்கட்டு கட்டி விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை ரீமா கல்லிங்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !