உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை

பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை

'படையப்பா' படத்தில் தன் காதலை உதாசீனப்படுத்திய ரஜினியை வெறுத்து ரம்யா கிருஷ்ணன் பல ஆண்டுகள் இருட்டு அறையில் தனியாக வசித்து தன்னைதானே தண்டித்ததை கதையாக தெரியும். ஆனால் அது நிஜத்திலும் நடந்துள்ளது.

பிரபலமான பெங்காலி நடிகை சுசித்ரா சென், இயற்பெயர் ரோமா தாஸ்குப்தா. 1931ம் ஆண்டு பங்களாதேஷில் உள்ள பப்னா என்ற இடத்தில் பிறந்தார். இந்தியா பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம் கோல்கட்டாவிற்கு குடியேறியது. பின்னர் பிரபல தொழிலதிபர் ஆதிநாத் சென்னின் மகன் திபநாத் சென் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகுதான் அவர் நடிகை ஆனார். 1952ம் ஆண்டு 'சேஷ் கோத்தாய்' என்ற பெங்காலி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் வெளிவரவில்லை. இதன்பிறகு நடித்த 'ஷாரே சுவத்தோர்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நாயகனாக நடித்த உத்தம் குமாருடன் இணைந்து 30 படங்களில் ஜோடியாக நடித்தார்.

பெங்காலி படம் அல்லாது தேவதாஸ் உள்ளிட்ட பல இந்திப் படங்களிலும் நடித்தார். 'சாத் பாகே பந்தா' படத்திற்காக மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் அவரால் தனது கணவரோடு அதிகநேரம் செலவிடமுடியவில்லை. இதன் காரணமாக மதுவுக்கு அடிமையான கணவர் மனைவியை பிரிந்து அமெரிக்கா சென்றவர் அங்கேயே மரணம் அடைந்தார்.

கணவரின் சாவுக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் தவித்த சுசித்ரா சென், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனி அறையில் வாழத் தொடங்கினார். சுமார் 36 வருடங்கள், அவர் தனது வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் தனிமையில் வாழ்ந்தார். நெருங்கிய குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை. தனது 83வது வயதில், அதே தனிமை அறையில் மரணம் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Premanathan S, Cuddalore
2025-10-12 14:03:27

நடிகைகளில் இப்படியும் ஒருவரா? ஆச்சரியம் இந்த நல்ல ஜீவனுக்கு இறைவன் காலடியில் இடம் உண்டு


ஶ்ரீநி
2025-10-11 19:23:09

பதி-பத்தினி - புறம் பேசும் உலகம் - பேசியதை நம்பி கணவர் மோசம் போய் தன் வாழ்க்கையையும் இழந்து ஒப்பற்ற உத்தமியின் வாழ்க்கையையும் அழித்தார்.