பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி
ரஜினிகாந்தும், சிவாஜியும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். ஆனாலும் 'மாவீரன்' படத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்திருக்கிறார் சிவாஜி. 1986ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் அமிதாப்பச்சன் நடித்த 'மர்த்' என்ற படத்தின் ரீமேக். இதில் ரஜினியுடன் அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்தனர். ராஜசேகர் இயக்கினார், இளையராஜா இசை அமைத்தார்.
இந்த படத்தில் ரஜினியின் தந்தை கேரக்டர் மிக முக்கியமானதாகும், இந்த கேரக்டரில் முதலில் சிவாஜி நடிப்பதாக இருந்தது. அது தொடர்பான விளம்பரங்களும் வெளியிடப்பட்டது. பின்னர் சிவாஜி அதில் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான தாரா சிங் நடித்தார்.
படத்தில் தந்தை கேரக்டருக்கான காட்சிகள் குறைவாக இருந்ததால் சிவாஜி நடிக்க மறுத்து விட்டதாகவும், அப்போது பல படங்களில் சிவாஜி பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் ஒதுக்கி கொடுக்க முடியாததால் நடிக்க வில்லை என்றும் கூறுவார்கள்.