உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான்

நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான்


திருச்செந்துார் அருகேயுள்ள நாதன்கிணறு எனது சொந்த ஊர். இயற்பெயர் சிவபாலன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும்போது, ஊரில் நாடகத்தில் நடித்ததற்கு வரவேற்பு கிடைத்தது. அப்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. வீட்டில் ரொம்ப கஷ்டம். அப்பா சென்னையில் வேலை செய்தாலும் அவரால் பணம் அனுப்ப முடியாது. அம்மா மிகவும் சிரமப்பட்டதால் நானும் சென்னை புறப்பட முடிவு செய்தேன்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வரவில்லை. ஆரம்பத்தில், வடபழனியில் உள்ள ஓட்டலில் வேலை செய்தேன். அங்கு சினிமா சம்பந்தப்பட்ட பலர் வருவார்கள். அப்படி வந்த ஒருவர் திடீரென்று என்னிடம், படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார். நான் யோசிக்காமல் நடிக்கிறேன் என்றேன். நான் வெளியில் நிற்கிறேன். நீ வா அட்ரஸ் தருகிறேன் என்றார்.

நானும் சிறிது நேரம் கழித்து ஆசையுடன் வெளியில் சென்று பார்த்தபோது அவரை காணவில்லை. சும்மா இருந்த என்னிடம், யார் என்றே தெரியாத அவர், சினிமா ஆசையை தூண்டிவிட்டு சென்று விட்டார். அன்று முதல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கையில் பணம் இல்லாததால் கேட்டரிங் வேலைக்கு சென்று கொண்டே வாய்ப்பு தேடினேன்.

முதன்முதலாக 'மறுமலர்ச்சி' என்ற படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை எனது அப்பாவிடம் தெரிவித்தேன். ஆர்வத்துடன் சினிமாவை பார்த்த அப்பா, 'ஒரு சீனில் மட்டும் வந்திருக்கிறாய்' என்றார். நான்கு வருடம் தேடி அலைந்து ஒரு காட்சியில் நடித்ததே நமக்குத் பெரிதாக தெரிந்தது. ஆனால் அப்பா இப்படி சொல்லி விட்டாரே என்று வருத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து முயற்சி செய்தேன். தங்கர் பச்சான் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்தேன்.

'தீபாவளி' என்ற படத்தில் வேலை செய்யும் போது இயக்குனர் சுசீந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் முக்கிய 7 கேரக்டர்களில் எனக்கு ஒரு கேரக்டர் தாருங்கள் என்று தைரியமாக கேட்டேன். அப்படி அப்படத்தில் 'அப்புக்குட்டி' என்ற கேரக்டர் வாய்ப்பு கிடைத்தது. படம் சிறப்பாக அமைந்தது.

இப்போது எனது பெயரே அப்புக்குட்டி ஆகி விட்டது. அதனைத் தொடர்ந்து 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இதுவரை 100க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டேன்.

சினிமாவில் நுழைந்த போது, நீ பெரிய ஆளாகவும் இல்லை, சிறிய ஆளாகவும் இல்லை. உனக்கு என்ன ரோல் கொடுப்பது என்று தெரியவில்லை என பலர் தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் முயற்சி செய்தேன். முயற்சியால் அத்தனையும் நடந்தது.

பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. தேசிய விருது கிடைத்ததும், 25 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்வதும் பெரிய சாதனையாக கருதுகிறேன்.

என்னிடம் பேச தயங்கியவர்கள் கூட இன்று நடிகர் ஆனதும் அன்புடன் தாமாக வந்து பேசுகின்றனர். அனைவரின் அன்பாலும், சினிமாவாலும் எனக்கு இது கிடைத்தது. எனக்கு பிடிக்காத ஒரே விஷயம், மற்றவர்களுடன் ஒப்பிடுவது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.

மற்றவர்களை பார்த்து நாம் பொறாமை கொள்ளக்கூடாது. அவரவரின் வாழ்க்கை முறை, தேவைகளை பொறுத்து அவரவர் வாழ்க்கை அமையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !