உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட்

ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட்


''இன்றைக்கு இருக்கிற ரசிகர்கள் இன்டலிஜென்ட். இயக்குனர்கள் அளவுக்கு சிந்திக்கிறார்கள். கதை, ஜோடி பொருத்தம் என படத்திலுள்ள அனைத்து அம்சங்களையும் கூர்ந்து கவனிக்கின்றனர். ரசிகர்களை மனதில் வைத்து நல்ல கதை அம்சமுள்ள படங்களை தான் ஒப்பு கொள்கிறேன். இதனால் அடிக்கடி திரையில் என்னைக் காண முடியாது'' என்கிறார் நடிகை சாய் பிரியா.

'சிவலிங்கா, யுத்தம் செய், பூம் பூம் காளை, டைனோசர்' உள்ளிட்ட தமிழ், 'என்டே உம்மண்டே பேரு' உள்ளிட்ட மலையாள சினிமாக்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது...

'டபுள்கேம்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறேன். மலையாளத்தில் மஞ்சுமல்பாய்ஸ் படத்தில் நடித்த பாஷியுடன் 'குண்டரெட்டிஆபீஸ்' என்ற மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளேன். இந்த படம் மலையாளத்தில் எனக்கென ஒரு இடத்தை பெற்று தரும்.

என்னை பொறுத்தவரையில் நமக்கு என இருப்பது நம்மை தேடி வரும். எனவே இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என எந்தவொரு படத்தையும் பார்த்துவிட்டு எப்போதுமே எண்ணியது இல்லை. நல்ல கதை, கேரக்டர்களை பொறுத்து வரும் பட வாய்ப்புகளை ஒப்பு கொண்டு வருகிறேன்.

சமீபத்தில் ரசித்து பார்த்த படம் 'தலைவன் தலைவி'. நித்யாமேனன் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். இயற்கையாக நடிக்கிறவங்க.

என் ஆல் டைம் பேவரைட் நடிகர் ரஜினி தான். பட விழா ஒன்றில் அவரை பார்த்திருக்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நடிப்பும், ஆளுமையும் பிடிக்கும். எனக்கு ரோல் மாடலே அவர் தான். என்னை போல எத்தனையோ பேரை 'இன்ஸ்பையர்' பண்ணியவர் அவர்.

புதுமுக நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயார். ஆனால் இருவருக்கும் நல்ல 'கெமிஸ்ட்ரி' இருக்க வேண்டும். இப்போதெல்லாம் ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்' ஆக உள்ளனர். இயக்குனர் அளவுக்கு சிந்திக்கிறார்கள். சரியான ஜோடியாக இல்லாத போது 'ட்ரோல்' செய்து துவம்சம் செய்து விடுவர். கதை நன்றாக அமைய வேண்டும்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கேரக்டர்களாக தேர்வு செய்து நடிக்கிறேன். முதல் படத்தில் பிராமண பெண், அடுத்த படத்தில் முஸ்லீம் பெண், யுத்தம் செய் படத்தில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தைரியமான பெண் என நடித்தேன். அதுபோல டபுள்கேம் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போன்ற கேரக்டர். பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும்.

தாய் மொழி என்பதால் தமிழில் எந்த கேரக்டர் என்றாலும் நடித்து விடுவேன். மலையாளம், தெலுங்கு படங்களை பொருத்தவரையில் அந்த மொழியில் பேசி நடிக்க வேண்டும் என்பதால் ஒன்றுக்கு இரண்டு முறை பேசி பார்த்த பிறகு தான் ஷூட்டிங் செல்வேன். மலையாளம், தெலுங்கு நன்றாக பேசக்கற்று கொண்டேன்.

மலையாளத்தில் ஒரிரு படங்களில் நடித்திருந்தாலும் கூட அங்கு எனக்கான இடம் உள்ளது. தமிழ் படங்களில் அந்தளவுக்கு வரவேற்பு வரும் காலங்களில் அமையும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !