உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம்

பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம்


சிரிப்பென்ற இனிப்பைக் கொண்டு, சீர்திருத்த கருத்தென்ற மருந்தினை, சினிமா என்ற சீர்மிகு ஊடகம் மூலம், சிந்தாமல், சிதறாமல் சிந்தைக்கு உரமாய் தந்த சிந்தனையாளர்தான் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன். வெறும் நடிப்பென்று மட்டும் இருந்து விடாமல், ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்து வெற்றி கண்ட இவர், தனது 'அசோகா பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு பதாகையின் கீழ், “நவீன விக்கிரமாதித்தன்”, “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “இழந்த காதல்” போன்ற திரைப்படங்களையும், பின் “என் எஸ் கே பிலிம்ஸ்” என்ற பதாகையின் கீழ், “பைத்தியக்காரன்” “நல்லதம்பி”, “மணமகள்” போன்ற திரைப்படங்களையும் தந்ததோடு, “பணம்” என்ற ஒரு பைந்தமிழ் திரைக்காவியத்தையும் இயக்கி, நமக்காகத் தந்திருந்தார்.

ஒருமுறை சென்னை மாநில சிறுசேமிப்புத் திட்ட அதிகாரி ஒருவர் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த, அதில் பேசிய 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன், செல்லாத 100 ரூபாயின் கதை ஒன்றை சுவாரஸ்யமாக சொல்லி, அனைவரும் ரசிக்கும்படி பேசியிருந்தார்.

ஒரு ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி ஒருவர், ஓட்டல் கேஷியரிடம் ஒரு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து. அதை ஓட்டலில் இருந்து அவர் ஊர் திரும்பும்போது மறுபடியும் பெற்றுக் கொள்வதாக கூறித் தந்துவிட, பணத்தை வாங்கி வைத்திருந்த கேஷியர், ஓட்டல் தர வேண்டிய மளிகை பாக்கியைக் கேட்டு வந்த மளிகைக் கடைக்காரரிடம் அந்த 100 ரூபாய் நோட்டைத் கொடுத்துவிட, வாங்கிச் சென்ற மளிகைக் கடைக்காரர், அவரது குடும்ப டாக்டர் தனக்குத் தரவேண்டிய பில் தொகைக்காக வீட்டிற்கே ஆள் அனுப்பியிருப்பதைக் கண்டு, அந்த 100 ரூபாய் நோட்டை அவரிடம் தந்துவிட, முன்னொரு முறை ஒரு டீ பார்ட்டி நடத்திய வகையில், அந்த குறிப்பிட்ட ஓட்டலுக்கு மருத்துவர் தர வேண்டிய கட்டணத்திற்காக அந்த 100 ரூபாய் நோட்டை அந்த ஓட்டலுக்கே மருத்துவர் மீண்டும் கொடுத்தனுப்ப, ஓட்டல் கேஷியரிடம் பணத்தைக் கொடுத்து வைத்திருந்த அந்த பிரயாணி ஊர் திரும்பும் நேரமும் வர, தான் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் திரும்பக் கேட்ட பிரயாணியிடம் அந்தக் கேஷியர் அவர் தந்த அந்த 100 ரூபாய் நோட்டைத் திரும்பத் தந்திருக்கின்றார். பணத்தைத் திரும்பப் பெற்ற அந்தப் பிரயாணி, அந்த 100 ரூபாய் நோட்டை மேலும் கீழும் நன்றாக பார்த்துவிட்டு, “இது ஒரு செல்லாத நோட்டு, உங்களிடம் கொடுத்தாலாவது செல்லுபடியாகும் என நினைத்து கொடுத்திருந்தேன். அது மீண்டும் என்னிடமே திரும்ப வந்திருக்கின்றது என வருத்தபட்டு, அந்த நோட்டைக் கிழித்து எரிந்திருக்கின்றார்.

இந்தக் குட்டிக் கதையைச் சொல்லிய என் எஸ் கிருஷ்ணன், அந்த சிறுசேமிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய பொருளாதார நிபுணர் ஆர் கே சண்முகம் செட்டியார் என்பவரிடம், நான் கூறிய இந்தக் கதையில் யாருக்கு நஷ்டம்? என்பதை தாங்கள் தான் கூற வேண்டும் என கேட்க, பிரயாணிக்குத்தான் நஷ்டம் என ஆர் கே சண்முகம் செட்டியார் பதிலளிக்க, அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே? என என் எஸ் கிருஷ்ணன் கேள்வி எழுப்ப, அப்படியானால் யாருக்கும் நஷ்டம் இல்லை என்றிருக்கின்றார் சண்முகம் செட்டியார். அவ்வாறென்றால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் ஆகிய இவர்களது கடன்கள் அடைபட்டிருக்கின்றதே? என மீண்டும் என் எஸ் கிருஷ்ணன் கேள்வி எழுப்ப, இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது. அதன் மேல் வைக்கக் கூடிய மதிப்புதான் நாணயம். நோட்டுக்கு விலை காகித விலை மட்டுமே. அதற்கு 100 ரூபாய் என்ற மதிப்பை நாம்தான் கொடுக்கின்றோம். இந்தக் குட்டிக் கதையையே தனது “பணம்” திரைப்படத்தின் முன்னோடிக் கதையாகக் காட்டி, படத்தை இயக்கியிருப்பார் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன்.

“பராசக்தி” திரைப்படத்திற்குப் பின் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் இரண்டாவது திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படத்தில், பத்மினி, என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், எஸ் எஸ் ராஜேந்திரன், எஸ் டி சுப்புலக்ஷ்மி, வி கே ராமசாமி, கிரிஜா, கே ஏ தங்கவேலு, டி கே ராமச்சந்திரன், பி ஆர் பந்துலு என ஒரு பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருந்த இத்திரைப்படத்தின் மூலம்தான் 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையர்கள் இசையமைப்பாளர்களாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இத்தனைச் சிறப்புகளுக்குரிய இத்திரைப்படம், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முதல் திரைப்படமான “பராசக்தி” பெற்ற வெற்றியைப் பெறத் தவறியது என்பதுதான் உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !