பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை
கே.பாலச்சந்தருக்கு முன்பு திரைக்கதையில் பல ஜாலவித்தைகளை செய்தவர் சி.பி.ஸ்ரீதர். கல்யாண பரிசு மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பு பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். முதல் படம் எதிர்பாராதது. பின்னர் அமரதீபம், மஞ்சள் மகிமை, உள்ளிட்ட சில படங்களுக்கு எழுதினார்.
அவரது முதல் கதையான எதிர்பாராதது மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசன், பத்மினி, சித்தூர் வி.நாகய்யா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எஸ்.ஏ.அசோகன், எஸ்.வரலட்சுமி, 'பேபி' சரஸ்வதி, கே.எஸ்.அங்கமுத்து, எம்.ஆர்.சந்தானம், 'நண்பன்' ராமசாமி, கே.துரைசாமி, நாராயணசாமி, என்.எஸ். பொன்னுசாமி மற்றும் தி.க. ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை. சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கினார்.
பிற்காலத்தில் கே.பாலச்சந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்தை போன்ற கதை. மகன் காதலித்த பெண்ணை தந்தை திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதுதான் கதையின் மைய இழை. பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கில் 'இளவேல்பு' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'நித்திய கன்னிகா' என்ற பெயரிலும், ஹிந்தியில் 'சாராதா' என்ற பெயரிலும் ரீமேக் ஆகி அங்கேயும் வெற்றி பெற்றது.