உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன்

பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன்

இளையராஜா கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில் புதிதாக வந்த பல திறமையான இசை அமைப்பாளர்கள் ஒரு சில படங்களோடு காணாமல் போனார்கள். அதற்கு காரணம் அப்படி புதிதாக வருகிறவர்களோடு இணைந்து யாராவது பணியாற்றினால் அவர்களோடு இளையராஜா எந்த காலத்திலும் இணைந்து பணியாற்ற மாட்டார்.

இதன் காரணமாக இளையராஜாவை பகைத்துக் கொள்ள விரும்பாதவர்கள் புதியவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது அன்றைய நிலை. அப்படியான காலத்தில் வந்தவர்தான் தேவேந்திரன். தேவேந்திரன் திருவொற்றியூர் பள்ளியில் இசை ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒருமுறை இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அங்கு நடந்த ஒரு நிகழ்விற்கு தலைமை விருந்தினராக வந்தபோது, மாணவர்கள் பாடிய ஒரு பாடலைக் கேட்டு அவர் ஈர்க்கப்பட்டார், அதற்கு தேவேந்திரன் இசையமைத்திருந்தார்.

தேவேந்திரனை எனது அடுத்து படத்தில் இசை அமைப்பாளராக்குவேன்' என்று அந்த விழா மேடையிலேயே அறிவித்தார். ஆனால் அதன்பிறகு அவர் படம் எடுக்க பெரிய இடைவெளி ஏற்பட்டது.

இந்த நேரத்தில் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் 'மண்ணுக்குள் வைரம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் சிவாஜி, முரளி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். இந்த படத்திற்கு இசை அமைக்க கேட்டபோது ஏனோ இளையராஜா மறுத்து விட்டார்.

இதனால் ஆர்.சுந்தர்ராஜன் தேவேந்திரன் பற்றி மனோஜ்குமாரிடம் கூற 'மண்ணுக்குள் வைரம்' படத்தின் மூலம் தேவேந்திரன் இசை அமைப்பாளர் ஆனார். அந்த படத்தில் இடம்பெற்ற 'பொங்கியதே காதல்' பாடல் பெரிய ஹிட்டானது. அடுத்ததாக பாரதிராஜா இயக்கிய 'வேதம் புதிது' படத்திற்கு இசை அமைத்தார். அதன் பின்னணி இசை பேசப்பட்டது. கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் ஹிட்டானது.

அடுத்த 30 ஆண்டுகளில், அவர் 20 படங்களுக்கும் குறைவான படங்களுக்கு இசையமைத்தார். ஆண்களை நம்பாதே, ஒரே ரத்தம், கனம் கோர்ட்டார் அவர்களே, காலையும் நீயே மாலையும் நீயே, போன்றவை அவர் இசை அமைத்த சில முக்கிய படங்கள். கடைசியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு 'பச்சை விளக்கு' என்ற படத்திற்கு இசை அமைத்தார்.

'இளையராஜாவை விட தேவேந்திரன் இசையில் அறிவுமிக்கவர், திறமை மிக்கவர் ஆனால் அவர் தகுதியான வெற்றியையோ புகழையோ அடையவில்லை' என்று பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்ல அதுவே இளையராஜா, பாரதிராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !