விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்…
விஷால், சுந்தர் சி கூட்டணியில் “ஆம்பள, ஆக்ஷன், மதகஜ ராஜா' ஆகிய படங்கள் இதற்கு முன்பு வெளிவந்தன. இந்த வருடத்தின் முதல் வெற்றிப் படமாக 'மதகஜ ராஜா' படம் அமைந்தது. படம் முடிந்து 12 வருடங்கள் கழித்து வெளியான படம் இப்படி ஒரு வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது. படத்தின் வெற்றியால் விஷால், சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என அவர்கள் நட்பு வட்டாரங்கள் விரும்பினர். அதன்படி அதற்கான வேலைகள் ஆரம்பமானது.
இப்போது சுந்தர் சி, 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். விரைவில் அந்தப்படம் முடிந்துவிடும். அதற்குப் பிறகு விஷால் நடிக்கும் படத்தை ஆரம்பிக்க உள்ளாராம். படத்தின் அறிவிப்பை இப்போதைய டிரெண்ட் படி ஒரு முன்னோட்ட வீடியோவுடன் அறிவிக்க உள்ளதாகத் தகவல். அதற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது. இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக விஷால் தற்போது நடித்து வரும் 'மகுடம்' படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம்.
விஷால் படத்தை முடித்த பின் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.