பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர்
200 படங்களுக்கு மேல் நடித்து விட்ட அமலா அறிமுகமானது டி.ராஜேந்தர், இயக்கி தயாரித்த 'மைதிலி என்னை காதலி' படத்தில். அமலா, கோல்கட்டா நகரத்தில் உள்ள ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியம், நடனம் ஆகிய கலைகளில் ஆர்வம் கொண்டு அந்த கலைகளை கற்றுள்ளார். பல மேடைகளில் ஆடி வந்தார். 'மைதிலி என்னை காதலி' படத்தின் ஸ்கிரிப்டை எழுதிவிட்டு நடிப்பவர்கள் யார் யார் என்று முடிவு செய்து விட்டு நாயகியை மட்டும் தேடிக் கொண்டிருந்தார் டி.ராஜேந்தர்.
புதுமுகமாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் தேடிக் கொண்டிருந்தபோது தான் அமலா பற்றி கேள்விப்பட்டு அவரது குடும்பத்தை சந்தித்து அமலாவை நடிக்க கேட்டார்.
டி.ராஜேந்தரின் முந்தைய படங்கள் பற்றி அமலா குடும்பம் அறிந்திருந்தாலும் இந்த படத்தில் அவரது ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிறபோது அவர்கள் தயங்கினார்கள். ஆனால் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் 'அமலா நாட்டியத்தில்தான் ஆர்வமா இருக்கிறாள், நடிப்பில் இல்லை' என்று கூறி அனுப்பி விட்டார்கள்.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய டி.ராஜேந்தர், மறுநாள் தன் மனைவி உஷாவுடன் அமலா குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது உஷா கர்ப்பமாக இருந்தார். கதைப்படி நாயகன், நாயகியை தொடவே மாட்டார், படத்தில் பரதநாட்டியத்திற்கு பெரிய முக்கியத்தும் இருக்கு. கேரக்டரே ஒரு பரதநாட்டிய கலைஞர்தான் என்பதை எடுத்துச் சொன்னார். அதோடு உஷாவின் அன்றைய நிலை இவற்றால் ஈர்க்கப்பட்ட அமலா குடும்பத்தார் 'மைதிலி என்னை காதலி' படத்தில் நடிக்க சம்மதித்தனர்.