சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம்
தமிழ், தெலுங்கில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த வருட தீபாவளிக்கு நடிகர் சிரஞ்சீவி சில நடிகர், நடிகையரை தனது வீட்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு அழைத்திருக்கிறார். தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ், நடிகை நயன்தாரா, ஆகியோர் அவரது அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்று தீபாவளி கொண்டாடி உள்ளார்கள். அவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளார் சிரஞ்சீவி. அனைவருமே அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர்.
“இந்த முறை எங்களது தீபாவளியை வேறொரு சிட்டியில் கொண்டாடினோம். இன்றுடன் 'நானும் ரவுடிதான்' படம் வெளிவந்து 10 வருடங்களாகிவிட்டது. இன்றைய நாளை கொண்டாட வேறு விதமாக கனவு இருந்தது. 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' உங்கள் அனைவரின் இதயங்களையும் சென்றடைந்துள்ளது. உங்களது சிரிப்பு, உங்கள் வார்த்தைகள், உங்கள் அன்பு, எனக்கு இந்த நாளை இன்னும் சிறப்பானதாக ஆக்கியிருக்கும். நெனச்சது நடந்தாலும் நடக்கலன்னாலும், நல்லதே நடக்கும்னு நம்புவோம்,” என ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
நடிகை நயன்தாரா, “இந்த தீபாவளி வித்தியாசமாக உணர வைத்தது. அரவணைப்பு நிறைந்தது, அன்பு நிறைந்தது, என்னைச் சுற்றியுள்ள மக்களில் வீட்டைக் கண்டறியும் உணர்வு ஒளி எப்போதும் நமக்குள் மற்றும் நம்மைச் சுற்றி இருக்கட்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகர் ராணா டகுபதி, நடிகை ஸ்ரீலீலா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.