எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல்
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'அஞ்சாதே' படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அஜ்மல் அமீர். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு 'கோ' படத்தில் அவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் மீண்டும் உயிர் பெற்றுத்தந்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் அஜ்மல் குறித்து சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை கிளம்பியது.
ஒரு பெண்ணிடம் அஜ்மல் தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. பலரும் அது அஜ்மல் குரல் தான் என்றும் அவர் இப்படி பேசுவது தவறு என்றும் கண்டன கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக அஜ்மல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான கெட்ட செய்தி வந்தது. இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு என்னுடைய அன்பை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படி என்னுடைய பெயரை களங்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற ஆடியோக்களை வெளியிட்ட நபர்கள் இந்த அக்கறையை, அன்பை சமுதாயத்தில் காட்டினால் நன்றாக இருக்கும். எந்த ஒரு கட்டுக்கதையோ அல்லது ஏஐ மூலம் குரல் மாற்றமோ அல்லது புத்திசாலித்தனமான எடிட்டிங்கோ எதுவுமே என்னையோ அல்லது என் திரையுலக பயணத்தையோ அழித்து விட முடியாது” என்று கூறியுள்ளார்.
மேலும், “இதற்கு முன்னதாக என் ரசிகர்கள் உருவாக்கி வைத்திருந்த ஒரு புரொபைலை தான் நான் பயன்படுத்தி வந்தேன். இன்றுமுதல் அதை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டேன். இனி என்னுடைய சோசியல் மீடியா கணக்கை நான் மட்டுமே கையாளப் போகிறேன். வேறு எந்த ஒரு அட்மினோ மற்றவர்களோ இதை கையாள முடியாது” என்றும் கூறியுள்ளார்.