ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டியூட், பைசன், டீசல், கம்பி கட்ன கதை, பூகம்பம் படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில் 'டியர் ஜீவா' என்ற படம் 'டென்ட் கொட்டாய்' என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி புகழ் டிஎஸ்கே கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜின் உதவியாளர் பிரகாஷ் வி பாஸ்கர் இயக்கியுள்ளார். தி காம்ரேட் பிலிம்ஸ் சார்பில் சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரித்துள்ளனர்.
கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் பிரகாஷ் வி.பாஸ்கர் கூறும்போது “இந்த படம் ஒரு உணர்ச்சி மிகுந்த காதல் கதை. குடும்பத்துடன் அமர்ந்து அனைவரும் பார்க்கும் விதமான ஒரு ரொமான்டிக் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத்தான் எங்களுக்கு விருப்பம். ஆனால் நாங்கள் இதில் குறைந்த அளவே முதலீடு செய்திருப்பதால் நிறைய பேரிடம் சென்று சேருவதற்காக நேரடியாக டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் இந்தப்படத்தை தீபாவளி வெளியீடாக ஒளிபரப்பு செய்துள்ளோம் என்றார்.