2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல்
கடந்தாண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. வித்தியாசமான கதைக்களங்களில் விருதுகளை குறி வைத்து படம் இயக்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இதை இயக்கினார். வரலாற்று பின்னணியில் ஒரு பேண்டஸி திரைப்படம் ஆக இது உருவாகி இருந்தது. இதனாலேயே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரிலீஸுக்கு முன்பு இருமடங்காக இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறி தோல்வி படமாக அமைந்தது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷோபி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “மலைக்கோட்டை வாலிபன் படத்தின் கதையை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி சொன்னதுமே அடுத்த 15 நிமிடத்தில் மோகன்லால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். படமும் படப்பிடிப்பும் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தன. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்கிற ஒரு எண்ணம் இயக்குனரிடம் ஏற்பட்டது.
ஆனால் நானும் மோகன்லாலும் திட்டவட்டமாக அதற்கு அவரிடம் மறுப்பு தெரிவித்து விட்டோம். ஆனாலும் இரண்டாம் பாதியில் சில காரணங்களை சொல்லி சின்ன சின்ன மாற்றங்களை இயக்குனர் செய்தார். அது மட்டுமல்ல படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்து முடித்தார். அதனால்தான் இந்த படம் தோல்வி அடைந்தது என்று சொல்ல மாட்டேன்.. நல்ல படம்தான். ஆனால் ரசிகர்களை சென்று சேரவில்லை. எல்லோரும் நினைப்பது போல இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் ஏடுக்கப்போவது இல்லை” என்று கூறியுள்ளார்.