'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'காந்தாரா 1' படம் 800 கோடி வசூலைக் கடந்து, மூன்றாவது வாரத்தைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இப்படத்தைப் பாராட்டியதால் ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி அதிகம் சென்றார்கள்.
பக்திமயமான இந்தப் படத்திற்கு இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் ரசிகர்களும் மிகுந்த வரவேற்பைக் கொடுத்தார்கள். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் தற்போது படத்தைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
“நேற்றிரவு 'காந்தாரா' பார்த்தேன். வாவ், மனதைப் பறிக்கும் என்ன ஒரு படம். அதைப் பார்க்கும் போது நான் ஒரு மயக்கத்தில் இருந்தேன். ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். எழுத்தாளராக, இயக்குனராக, நடிகராக 'ஒன் மேன் ஷோ' ஆக ஒவ்வொரு துறையிலும் அவர் சிறந்து விளங்கினார்.
ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி அற்புதமானது. குறிப்பாக அஜனீஷ் லோகநாத் இசை, அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவு, தரணி கங்கபுத்ரா கலை இயக்கம், அர்ஜுன் ராஜ் சண்டைப் பயிற்சி, மற்றும் தயாரிப்பாளர், தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரிய வாழ்த்துகள்.
உண்மையில் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. நிறைய அன்பு, போற்றுதல், மரியாதை …,” என அனைவரையும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.