'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி
நடிகர் ரவி மோகன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரவிமோகன் ஸ்டுடியோஸ்' மூலமாக 'ப்ரோ கோட்' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் எஸ்ஜே சூர்யாவும் நடிக்கிறார். இதன் அறிமுக வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே 'ப்ரோ கோட்' படத் தலைப்பிற்கு டில்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனமான 'எண்டோஸ்பிரிட் பிவரேஜ்' சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தங்களது நிறுவனம் 'ப்ரோ கோட்' என்ற பெயரில் பீர் தயாரித்து வருவதாகவும், அந்தப் பெயரில் 'டிரேட் மார்க்' வாங்கியிருப்பதாக மனு செய்திருந்தார்கள். இதனை எதிர்த்து ரவி மோகன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவி மோகனின் படத்திற்கு 'ப்ரோ கோட்' தலைப்பு வைப்பதை தடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில் எண்டோஸ்பிரிட் மதுபான நிறுவனம், டில்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. அங்கு நடைபெற்ற விசாரணையில், 'ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம், ப்ரோ கோட் என்ற தலைப்பை எந்த வடிவத்திலும் பயன்படுத்தவோ, வெளியிடவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது' என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், படத்தின் தலைப்பை தொடர்ந்து பயன்படுத்த ரவிமோகன் நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றம் தலைப்பை பயன்படுத்த அனுமதி அளித்ததை மேற்கொள்காட்டி ரவிமோகன் ஸ்டுடியோஸ் தரப்பு வாதிட்டது. இதனை நிராகரித்த நீதிமன்றம், ''ப்ரோ கோட் பானங்கள் பரவலாக அறியப்பட்டவை. அந்த பெயர், நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் வலுவாக பிணைந்துள்ளது. அப்படியிருக்கையில், உங்கள் படத்தின் தலைப்பு, பதிவு செய்யப்பட்ட 'டிரேட் மார்க்'-க்கு ஒத்து இருப்பதால், நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும்'' எனக்கூறி, தடை உத்தரவை பிறப்பித்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி, டிசம்பர் 23ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பளித்தபோதும், டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமா அல்லது தலைப்பை மாற்றுமா என்பது அடுத்தக்கட்ட விசாரணையின் முடிவில் தெரியவரும்.