இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி
மலையாள திரைகயுலகில் கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பிரபலம் இல்லாத, நடிகைகள் என்று சொல்லிக் கொண்ட பலர், பிரபல நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் அளித்தார்கள். அதில் பிரபல இயக்குனர் ரஞ்சித் மீதும் பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டன. அதில் பெங்களூருவைச் சேர்ந்த ஆண் ஒருவர், நடிகர் ரஞ்சித் தன்னை ஆடிசனுக்காக வரவழைத்து பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்தார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட வருடம் அப்படிப்பட்ட ஒரு ஹோட்டலே அந்த இடத்தில் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து, வழக்கில் போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லை என கூறி அந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இன்னொரு பக்கம் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இயக்குனர் ரஞ்சித் தான் இயக்க இருந்த பாவேரி மாணிக்கம் என்கிற படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு தருவதாக சொன்னதாகவும் அந்த கதாபாத்திரம் குறித்து பேசுவதற்காக தன்னை கொச்சி கடவந்திராவில் உள்ள அவருடைய வீட்டிற்கு வர சொன்னதாகவும் அப்படி சென்றபோது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயற்சித்ததாகவும் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் நடந்த வருடம் என அவர் குறிப்பிட்டிருந்தது 2009ல். ஆனால் இவர் ரஞ்சித் மீது புகார் அளித்தது 2024ல் இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் சம்பவம் நடந்து 15 வருடங்கள் தாமதமாக புகார் கூறப்பட்டு இருப்பதால் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாகவும் இருக்கிறது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.