கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி
அஜித் பொதுவாக பல வருடங்களாகவே மீடியாக்களை சந்திப்பதில்லை, பேசுவதும் இல்லை. எதுவாக இருந்தாலும் அறிக்கையாக வெளியிட்டு விடுவார். ஆனால் இப்போது அவர் கார் பந்தையத்தில் கலந்து கொண்டு வருவதால் அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை அவரால் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரசிகர்களின் எல்லை மீறிய அன்பு
நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தமிழ் பேச தெரியாது. தமிழை கற்றுக்கொண்டு பேச கடுமையாக உழைத்தேன். அந்த போராட்டம் பெரியது. வந்த புதிதில் உன் பெயர் பிரபலமான பெயர் போல இல்லை, பெயரை மாற்று என்றார்கள். ஆனால் சினிமாவுக்காக என் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை. எனவே வேறு பெயரை வைத்துக் கொள்ளவில்லை. எனது திரைப்பயணத்தில் வந்த சவால்கள் அனைத்தையும் கடந்துள்ளேன்.
ரசிகர்கள் என்மீது பொழியும் அன்புக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஆனால், அதே அன்பின் காரணமாக, குடும்பத்துடன் நான் வெளியே செல்ல முடியவில்லை. என் மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியவில்லை.
கையை கீறினார்கள்
2005ல் வெளியே சென்றபோது ரசிகர்கள் அதிகளவில் கூடிவிட்டனர். ரசிகர்கள் என்னிடம் கைகொடுத்தனர். நானும் நம்பி கை கொடுத்தேன். ஆனால் கூட்டத்தில் ஒருவர் என் கையை பிளேடால் கீறிவிட்டார். அந்த தழும்பு இன்னமும் என் கையில் உள்ளது.
கரூர் சம்பவம்
தமிழ்நாட்டில் பல விஷயங்கள் நடந்து வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்துள்ளது(கரூர்). அது தனி ஒரு நபரின் பொறுப்பல்ல. நம் அனைவரும் அதற்கு பொறுப்பு ஆவோம். இதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. கூட்டம் கூட்டுவதை விரும்பும் போக்கை கைவிட வேண்டும். அதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
29 அறுவை சிகிச்சை
இதுவரை எனக்கு 29 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ரேசின் போது பலமுறை விபத்தில் சிக்கி இருக்கிறேன். இது எனது குடும்பத்தினருக்கு மன அழுத்தத்தை தரும். திரைப்படத்திலும், பந்தயத்திலும் ஒரே நெறிதான். அது சரியான குழுவை அமைக்க வேண்டும். புகழ் என்பது இரண்டு பக்க கூர்மையான வாள் போன்றது. அது வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை தாராளமாக வாரி வழங்கும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கான முக்கியமான விஷயங்களை அது பறித்துவிடும்.
அடுத்தபடம் எப்போது
இப்போதில் இருந்து வருகிற மார்ச் மாதம் வரை கார் ரேசில் பிசியாக இருக்கிறேன். எனவே இந்த காலகட்டத்தில் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்ள முடியாது என்றாலும், எனது புதிய படத்தின் அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும்.
எனது இத்தனை ஆண்டு பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கும் என் மனைவி ஷாலினி, என் பிள்ளைகள் மற்றும் திரையுலகினர், ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.