உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்'
'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் படம் 'ரோஜா மல்லி கனகாம்பரம்'. இதில் அவரே கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா உட்பட பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் வருகிறார்.
படம் பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது : ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்.
பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் ‛வடம்' படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.
‛மாயாண்டி குடும்பத்தார்' என்ற படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இதை தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.