உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி

பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி


1987ம் ஆண்டு சிவகுமார் 'இனி ஒரு சுதந்திரம்' என்ற படத்தில் நடித்தார். இதனை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகுமார் சுதந்திரப் போராட்ட தியாகியாக நடித்தார். திருப்பூர் குமரனோடு போராடும்போது காலில் அடிபட்ட ஒரு சுதந்திர போராட்ட தியாகி பற்றிய கதை.

கதைப்படி அந்த தியாகியின் பல ஏக்கர் நிலத்தை அணை கட்டுவதற்காக அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். அதற்கு நஷ்ட ஈடாக தரவேண்டிய 40 ஆயிரம் ரூபாயை பெறுவதற்கு அந்த தியாகி படும் கஷ்டங்களை படம் சொல்லியது. வாழ்நாள் முழுக்க அகிம்சையை கடைபிடித்த அந்த தியாகியை ஒரு கொலை செய்ய வைத்து விடும் இந்த சமூகம்.

படத்தை எடுத்து முடித்ததும் அது சிவாஜியிடம் போட்டு காட்டினார்கள். படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜி சொன்னார் 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் நடிச்சேன். வெள்ளைக்காரனை எதிர்த்து 2 கப்பலோட்டின மனிதன் கடைசில பெரம்பூர் பக்கம் பெட்ரோல் வண்டி தள்ளி பொழைச்சாராம். அந்த விடுதலைப் போராட்ட தியாகி வேடத்தில் நடிச்சேன். தமிழ்நாட்டு ஜனங்க, பட்டை நாமத்தை என் நெத்தியில் போட்டுட்டாங்க... நீ ( சிவகுமார்) சுதந்திர போராட்ட தியாகியா நடிச்சிருக்கே. நாமக்கட்டிய கொழைச்சிட்டு இருக்காங்க. தயாரா இரு என்றாராம்.

அவரது கணிப்புபடியே 'இனி ஒரு சுதந்திரம்' படமும் படுதோல்வி அடைந்தது. சிவாஜி மிகவும் ரசித்து கஷ்டப்பட்டு நடித்த படத்தில் ஒன்று 'கப்பலோட்டிய தமிழன்'. அந்தப் படம் அடைந்த தோல்வி சிவாஜியை மிகவும் பாதித்தது அதன் வெளிப்பாடுதான் அவர் சொன்ன கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !