பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை
பாஷ்யம் என்ற மயிலாடுதுறை அய்யங்கார் சாண்டில்யன் என்ற பெயரில் 1950களில் பிரபலமா இருந்த வார இதழில் மாத சம்பளத்திற்கு தொடர்கதைகள் எழுதி வந்தார். இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952ல் வெளிவந்த 'அம்மா' என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார்.
இதற்கு முன் 1949ல் 'லேனா' செட்டியாரின் 'கிருஷ்ணபக்தி' என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரித்த 'என்வீடு' என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார்.
ஆனால் சில ஆண்டுகளிலேயே சினிமா தனக்கு சரிப்பட்டுவராது என்பதை புரிந்து கொண்டு மீண்டும் பத்திரிகைக்கு வந்தார். ஏராளமான சரித்திர நாவல்களை எழுதினார்.
கன்னிமாடம், யவனராணி, கடல்புறா, ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சரித்திர நாவல்களை எழுதினார். ஆனால் எந்த நாவலும் திரைப்படமாகவில்லை. இவரது நாவல்களில் திருப்புமுனையான சம்பவங்களை விட வர்ணிப்பே அதிகமாக இருக்கும் என்பதால் அதனை திரைப்படமாக்குதல் சிரமம் என்பார்கள்.
என்றாலும் அவர் திரைப்படத்திற்கென்றே ஒரு கதை எழுதினார் அது 'துளிவிஷம்'. இதுவும் சரித்திர கதைதான். ஒரு மலைநாட்டு குறுநில மன்னனை துரத்தி அடித்து விட்டு தனது ராஜ்யத்தை பெரிய மன்னன் வீரமார்த்தாண்டன் கைப்பற்றி விடுவார். தனது மனைவி மகனை எல்லா மன்னர்களுக்கும் பிடித்த ஒரு சாமியாரின் ஆசிரமத்தில் விட்டுவிட்டு வீரமார்த்தாண்டனை வீழ்த்த தனி படை அமைக்க கிளம்பி விடுவார்.
வளர்ந்து ஆளான மகன் சந்திரன் (கே.ஆர்.ராமசாமி) தந்தையுடன் மோதி வீரமார்த்தாண்டனை வீழ்த்துவதுதான் கதை. இதற்கிடையில் சந்திரன் சாமியாரின் மகள் நாகவள்ளியை (டி.ஆர்.கிருஷ்ணகுமாரி) காதலிக்க அவரையே பக்கத்து நாட்டு இளவரசனான சூரிய காந்தனும் (சிவாஜி) காதலிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. மோதிக் கொண்ட இருவரும் இணைந்து கடைசியில் வீரமார்த்தாண்டனை (எஸ்.வி.ரங்காராவை) வீழ்த்துவது மாதிரியான கதை.
சாண்டில்யனின் பெரும்பாலான கதைகள், இழந்த சாம்ராஜ்யத்தை மீட்கும் நாயகர்களின் கதையாகத்தான் இருக்கும். இதுவும் அப்படியான கதைதான். சிவாஜி வில்லனாக நடித்த படங்களில் இது முக்கியமானது. ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார், தண்டாயுதபாணி பிள்ளை இசை அமைத்தார். படமும் வெற்றி பெற்றது.