பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர்
கன்னட சினிமாவின் முக்கிய நடிகர் மற்றும் இயக்குனர் வி.ரவிச்சந்திரன். ரஜினியின் நண்பரான இவர் 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' படத்தை தயாரித்து, இயக்கினார். ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக நடித்த ரவிச்சந்திரன் 1986ம் ஆண்டு 'பொய்முகங்கள்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். கன்னட நடிகரை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கத்தில் 'ராகேஷ்' என்ற பெயரில் புதுமுகம் போன்று இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சுலக்ஷனா நடித்தார். ஒய்.ஜி.மகேந்திரன், சிவச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
சுஜாதா எழுதிய 'காகித சங்கிலி' என்ற நாவல்தான் 'பொய்முகங்கள்' என்ற திரைப்படமானது. இதனை சி.வி.ராஜேந்திரன் இயக்கினார், சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர். சிறுநீரகம் செயல் இழந்த கணவனை காப்பாற்ற போராடும் ஒரு மனைவியின் கதை.
படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. தனது இரண்டாவது படமான 'பருவ ராகம்' படத்தில் ரவிச்சந்திரன் என்ற ஒரிஜினல் பெயரிலியே நடித்தார்.