உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி

பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி

கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்தவர் மோனிஷா உன்னி. புகழ்பெற்ற மோகினியாட்ட கலைஞர் ஸ்ரீதேவி உன்னி மற்றும் நாராயணன் உன்னியின் மகள். மோனிஷா உன்னிக்கு, 5 வயதிலேயே நடனத்தின் மீது காதல் பிறந்தது. 14 வயதில், பள்ளி மாணவியாக இருந்தபோதே, தமிழில் வெளியான 'பாவையா' என்ற குறும்படத்தில் நடித்தார்.

அதில் அவர் திறமையை கண்டு வியந்த எம்.டி.வாசுதேவன் நாயர் 'நக்ஷதங்கள்' படத்தில் நடிக்க வைத்தார். இந்த படம் 1986ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது மோனிஷா உன்னிக்கு 16 வயது. அந்த படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.

அடுத்த 6 ஆண்டுகளில், பிரியதர்ஷன், கமல், ஹரிஹரன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார். அனைத்து படங்களுமே வெற்றி பெற்று, அவரை நல்ல நடிகையாகவும், கமர்ஷியல் ஹீரோயினாகவும் உயர்த்தியது.

தமிழில் 'பூக்கள் விடும் தூது' மற்றும் 'திராவிடன் படங்களில் நடித்தார். 1992ம் ஆண்டு வெளியான 'உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்' படத்தில் கார்த்திக்குடன் நடித்தார். கடைசியாக சரத்குமார் நடித்த 'மூன்றாவது கண்' படத்தில் நடித்தார்.

மிக வேகமான வளர்ந்த மோனிஷா உன்னி 1992ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 21. மோனிஷா உன்னியின் திடீர் மறைவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 21 வயதில் ஷோபாவை இழந்து தமிழ் சினிமா தவித்தது போன்று மோனிஷா உன்னியை இழந்து மலையாள சினிமா தவித்தது.

வயது குறைவு, நடித்த படங்கள் குறைவு என்றாலும் மோனிஷாவின் தாக்கம் இன்றும் மலையாள சினிமாவில் காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !