பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர்
சாதனைகள் படைத்த பல திரைப்பட ஆளுமைகள் கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லி.
ஏற்காட்டில் வாழ்ந்த பிரபல ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்த இவர், புகைப்படங்களின் மேல் உள்ள ஆர்வத்தால் 1940ம் ஆண்டில், மும்பைக்குச் சென்று, 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக சேர்ந்தார். பின்னர், சென்னை வந்த பர்ட்லி பிரகதி ஸ்டுடியோவில் சேர்ந்தார். 1945ல் வெளிவந்த 'சுவர்க சீமா' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரானார். நேஷனல் ஸ்டுடியோஸ், நியூடோன் ஸ்டுடியோஸ் மற்றும் வாகினி ஸ்டுடியோஸ் போன்ற பல நிறுவனங்களில் பர்ட்லி ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, சாந்தி நிலையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 1965ம் ஆண்டு வெளிவந்த மலையாள படமான 'செம்மீன்' இவரை இந்தியா முழுக்க பிரபலப்படுத்தியது. செம்மீன் படப்பிடிப்பின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக வேறொரு ஒளிப்பதிவாளர் சில காட்சிகளை படமாக்கினார். இதனால் தேசிய விருதை தவறவிட்டார். 'சாந்தி நிலையம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். கான் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்ற முதல் இந்தியவர் இவர்.
செயற்கை வெளிச்சம், சூரிய வெளிச்சத்தில் படம்பிடிக்கப்பட்ட காலத்தில் முதன் முதலாக நிலவு வெளிச்சத்தில் படம்பிடித்தவர் இவர். கடைசி காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவரை அவர் மரணம் அடையும் வரை தயாரிப்பாளர் நாகிரெட்டி தனது விஜயா மருத்துவமனையில் வைத்து பாதுகாத்தார்.