எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி
கன்னடத்தில் பிரபல நடிகர்களில் ஒருவரும் நடிகர் அர்ஜுனின் உறவுக்காரருமான துருவா சார்ஜா நடிப்பில் 'கேடி ; தி டெவில்' என்கிற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதமே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் தள்ளி வைக்கப்பட்டு தற்போது வரை புதிய தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் கிராமத்து பின்னணியில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் துருவா சார்ஜா.
இந்தப் படத்தில் கதாநாயகியாக கன்னட முன்னணி நடிகையான ரச்சிதா ராம் நடிக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லியாக நடித்து வரவேற்பை பெற்றவர். இதற்கு முன்னதாக 2017ல் வெளியான 'பர்ஜாரி' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில் எட்டு வருடத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர். இந்த படத்தை ராஜகுரு என்பவர் இயக்குகிறார்.