“என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக்
மலையாள திரையுலகில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்வேதா மேனன். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார். திரையுலகில் பெண்களுக்கான பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று கூறியுள்ள அவர், பெண் குழந்தைகளை சுதந்திரமாக வளர விட வேண்டும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “என் தந்தை கண்டிப்பானவர் என்றாலும் அன்பானவர். எனது ஒவ்வொரு பேச்சும் செயலும் அவரை மீறி எதுவும் எப்போது நடக்காது. எனக்கு அவர் நல்லது தான் செய்தார் என்றாலும் நானாக முடிவெடுத்து செயல்பட பல காலம் ஆனது. இப்போது அவர் இல்லை என்பதை நிஜமாக மிஸ் செய்கிறேன். ஆனாலும் என் குழந்தை எங்களை நம்பி வளர்வதை நான் விரும்பவில்லை. என்னை பொருத்தவரை எனக்கு முதலில் பெற்றோர்கள்.. அடுத்தது கணவர்.. மூன்றாவது தான் என்னுடைய மகள்..
அவளுக்காக நான் வீடு, சொத்து என எதுவும் இதுவரை சேர்க்கவில்லை. சேர்க்கவும் மாட்டேன். பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் சொத்து சேர்ப்பது என்பது முட்டாள்தனம். அவர்களுக்கு நல்ல கல்வியையும் உடல் ஆரோக்கியத்தையும் பயண அனுபவங்களையும் கொடுத்து ஆளாக்கி, அவர்கள் உங்களை சார்ந்து நிற்காமல் சுயமாக செயல்படும்படி வளர்ப்பது நல்ல பெற்றோருக்கு அழகு. நான் அதைத்தான் செய்து வருகிறேன்.
ஒரு முறை பேச்சுவாக்கில் என் மகள் இப்போது இருக்கும் இந்த அபார்ட்மெண்ட் எனக்குத்தான் என்று கூறினாள். அவளிடம் ஒருபோதும் கனவில் கூட அப்படி நினைக்காதே.. என்னுடைய வாழ்க்கையை நான் முழுமையாக வாழ்வேன்.. என்னிடமிருந்து உனக்கு அஞ்சு பைசா கூட கிடைக்காது. உன் வாழ்க்கையை நீ தான் வாழ வேண்டும் என்று கூறிவிட்டேன்” என கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு பெரும்பாலான ரசிகர்களிடமிருந்து ஆதரவு கருத்துக்களே பதிலாக வருகின்றன.