சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை
சென்னையில் நடந்த மாண்புமிகு பறை படவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் கே. பாக்யராஜ். பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி மகன் லியோ சிவா இந்த படத்தில் ஹீரோ. விழாவில் பாக்யராஜ் பேசியது : பறையை சாவு வீட்டில் மட்டுமல்ல, பல இடங்களில் அடிப்பார்கள். எங்கள் ஊர் அம்மன் கோயில் திருவிழாவில் பறை அடிப்பார்கள், அந்த நிகழ்ச்சியில் நான் ஆடியிருக்கிறேன். எந்த வேலையையும் ஈஸியாக நினைக்க கூடாது.
தாவணி கனவுகள் படப்பிடிப்பில் மணி ஆட்டிக்கொண்டே, தீபாராதனை காண்பிக்கும் சீனை எடுத்தோம். அந்த நடிகர் சரியாக அதை செய்வாரா என, பக்கத்தில் இருந்த நடிகர் சிவாஜி சந்தேகமுடன் கேட்டார். சின்ன டயலாக், சின்ன சீன் பக்காவாக சொல்லிக் கொடுத்துவிட்டேன் என்றேன். ஆனால், அந்த நபரால் அதை சரியாக செய்யவில்லை. உடனே சிவாஜி எல்லாராலும் மணியை ஆட்டிக்கொண்டு, தீபாராதனை காண்பிக்க முடியாது. அதுக்கு பயிற்சி வேண்டும் என்றார். நான் உணர்ந்து கொண்டேன்.
அதேபோல், சினிமாவுக்கு வந்த புதில் நீ எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சர்வர் வேலைக்கு போகாதே என்றார் ஒரு நண்பர். ஒரு கஷ்ட காலத்தில் பசி காரணமாக, ஒரு ஓட்டலில் சர்வர் வேலை கேட்டேன். என் நிலை புரிந்து கொண்ட அந்த முதலாளி சாப்பாடு போட்டுவிட்டு, கையில் பணம் கொடுத்து ஊருக்கு போ. சர்வர் வேலை சாதாரணமானது இல்லை. ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு உணவு ஆர்டர் சொல்வார்கள். அதை சரியாக கவனித்து, அதை சரியாக சேர்க்க வேண்டும். மாறினால் பிரச்னை ஆகிவிடும். அதேபோல், கொடுத்த உணவுக்கு சரியான கணக்கு போட்டு பில் போடணும். அதில் தவறு வந்தால் எனக்கு நஷ்டம். ரொம்ப பொறுப்புடன் செய்யும் வேலை என்றார். அப்போது சர்வர் வேலையின் முக்கியத்துவம் எனக்கு புரிந்தது.
என் நண்பரோ நீ சர்வர் வேலைக்கு போய்விட்டால் சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை. தங்க இடம் கிடைத்துவிடும். அதனால், நீ சினிமா வாய்ப்பு தேடி அலையமாட்டாய். ஓட்டல் வேலைக்கு பழகிவிடுவாய். அதனால் சர்வர் வேலை வேண்டாம் என்று சொன்னார். எந்த வேலையையும் எளிதாக நினைக்க கூடாது'.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.