தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'ஹீரோ', சிம்புவுடன் 2021ல் 'மாநாடு' படத்தில் நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். பின்னர் மலையாள சினிமா பக்கம் சென்றார். சமீபத்தில் அவர் மலையாளத்தில் நடித்த 'லோகா' படம் பெரிய ஹிட் ஆனது. அவர் மார்க்கெட் நிலவரம் எகிறி உள்ளது. இந்நிலையில் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7வது படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
‛மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்', 'இறுகப்பற்று', 'பிளாக்' என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7வது படம் இது. கல்யாணியுடன் தேவதர்ஷினி, ‛நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷன் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் திரவியம்.எஸ்.என் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை திரவியமுடன் இணைந்து பிரவீன் பாஸ்கர், ஸ்ரீ குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படம் தவிர கார்த்தியுடன் 'மார்ஷல்', ரவி மோகனுடன் 'ஜீனி' படத்திலும் கல்யாணி நடித்து வருகிறார்.