'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய்
'சத்யா' முதல் 'கேங்க்ஸ் ஆப் வாசேபூர்' மற்றும் 'தி பேமிலி மேன்' வரை, இந்திய சினிமாவில் நடிப்பின் அளவுகோலை தொடர்ந்து உயர்த்தி வருபவர் நடிகர் மனோஜ் பாஜ்பாய். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'தி பேமிலி மேன்' மூன்றாவது சீசனிலும் ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாஜ்பாய் கூறியதாவது:
'தி பேமிலி மேன் சீசன் 3' வெளியாவதால் எனக்கு ஒரே நேரத்தில் உற்சாகமும் பதட்டமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். எனக்கு மிகவும் நெருக்கமான பாத்திரம் ஸ்ரீகாந்த். இந்த சீசனில் இக்கதாபாத்திரத்தை ரசிகர்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்பது குறித்து நான் ஆவலாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன்.
முந்தைய சீசன்களுடன் ஒப்பிடும்போது, இந்த சீசன் கதையின் தன்மை தனித்துவமானது. தேசிய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், ஒரு தந்தையாக, கணவராக மற்றும் தனிநபராக ஸ்ரீகாந்தின் உள் போராட்டத்தை மையமாக கொண்டுள்ளது. த்ரில்லருக்கும் நெகிழ்ச்சிக்கும் நடுவே அழகான சமநிலையை இந்த சீசன் வெளிப்படுத்தும்.
இந்த சீசனுக்காக குடும்பமும் கடமையும் இடையே சிக்கித் தவிக்கும் ஒருவரின் உணர்ச்சிகளை பற்றி நிறைய ஆராய்ந்தேன். ஸ்ரீகாந்தின் ஒவ்வொரு மவுனமும், தயக்கமும், உடைந்த தருணங்களும் உண்மையாகத் தோன்ற வேண்டும் என்பதால் எழுத்தாளர்களுடன் நெருக்கமாக வேலை செய்தேன். இந்த முறை கதையின் தீவிரம் அதிகமாக இருப்பதால், படப்பிடிப்பில் கலகலப்பாக கூட இல்லாமல் இருந்தேன்.
இயக்குனர்கள் ராஜ், டிகே உடன் மூன்று சீசன்களில் பணிபுரிந்த அனுபவம் பற்றி கேட்கிறீர்கள். எங்களுக்குள் புரிதல் அதிகரித்துள்ளது. அவர்கள் 'ஆக்ஷன்' என்று சொன்னவுடன் நான் ஸ்ரீகாந்தாக மாறுவதற்கு முழு சுதந்திரத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடன் இருப்பது ஒரு கனவு போன்றது. 'தி பேமிலி மேன் 3', ஆழமான உணர்ச்சிகளையும் த்ரில்லரையும் இணைக்கும் வலுவான சீசனாக உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.