இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா. தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள ஆன்ட்ரியா மாஸ்க் என்கிற படத்தை தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை விகர்ணன் அசோக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.
இன்னொரு பக்கம் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரிலீஸ் ஆவதில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. இந்த நிலையில் மாஸ்க் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா மாஸ்க் படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் நிச்சயமாக பிசாசு 2 திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நானே எடுப்பேன். தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் நானே உணர்ந்து இதை சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.