உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை

ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை

'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களை அடுத்து தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா கடந்த வாரம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்போது படத்தின் தலைப்பு அறிவிப்பின் வீடியோ ஒளிபரப்பு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அப்போது பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் மீது பெரிய நம்பிக்கை இல்லை. என் பின்னால் அனுமன் ஆசி இருப்பதாக எனது அப்பா விஜயேந்திர பிரசாத் ஒரு முறை கூறினார். இந்த தொழில்நுட்ப சிக்கல் வந்துள்ளதால் எனக்குக் கோபம் வந்துள்ளது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவானா ?. என் மனைவி அனுமனின் தீவிர பக்தை. அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள். எனக்கு அவர் மீதும் கோபம் வந்தது. என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு உதவுவானா என்று பார்ப்போம்,” என்று பேசினார்.

அவர் பேசியபின் தொழில்நுட்பக் கோளாறு சரியாகி, அந்த வீடியோ சரியான முறையில் ஒளிபரப்பானது. அப்படியென்றால் அனுமன், கடவுள் நம்பிக்கை இல்லாத ராஜமவுலிக்கும் உதவி செய்துள்ளார் என்றுதான் அர்த்தம்.

ராஜமவுலியின் இந்த பேச்சிற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, அவர் மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார்கள். இதனிடையே, தீவிர இந்து மத பக்தரான, சில பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள தெலங்கானா எம்எல்ஏ ராஜா சிங், ராஜமவுலிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !