நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை
'டாக்டர்' திரைப்படத்தில் வில்லனாக, ஆனால் 'கோமதி அக்கா' என காமெடியாக நடித்து தனக்கான இடத்தை பிடித்தவர். 'கூலி' திரைப்படத்தில் 'பேட்பெல்லோ' வில்லனாக பெயர் பெற்று நிஜத்தில் போலீசாக இருந்து நடிகராக மாறிய கராத்தே கார்த்தி நம்முடன் பகிர்ந்தது...
சொந்த ஊர் மதுரை. சிறுவயது முதல் ரஜினியின் தீவிர ரசிகன். அவரின் 'பாயும் பலி' படத்தை பார்த்ததில் இருந்து உடற்பயிற்சி மீது நாட்டம் ஏற்பட்டு அதற்கான பயிற்சிகள், தற்காப்பு கலைகளை துவங்கினேன்.
2000ல் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் பணியில் சேர்ந்தேன். பணியில் இருக்கும் போது 13 முறை தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றேன். 2003ல் அகில இந்திய போலீஸ் துறைக்கான குத்துச்சண்டை போட்டியில் சிறந்த வீரர் விருது வென்றேன்.
பாக்சிங் போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளேன். 2006ல் எஸ்.ஐ., பதவி உயர்வு கிடைக்கும் நேரத்தில் சினிமாவின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பணியில் இருந்து வெளியேறினேன்.
குடும்பத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் திரைப்பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சித்தேன். முதன் முதலில் 'தசாவதாரம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. திறமையை முழுவதும் வெளிப்படுத்தினேன்.
அடுத்தடுத்து என்னை அறிந்தால், கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, சித்திரை செவ்வானம், பிகில் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். இவையெல்லாம் நான் தேடிய வாய்ப்புகள்.
ஆனால் முதன் முதலாக என்னை தேடி வந்த வாய்ப்பு 'டாக்டர்' திரைப்படம். இந்த படத்தில் வில்லனாக நடிக்க போகிறேன் என நினைத்தேன். ஆனால் 'கோமதி அக்கா' கதாபாத்திரம் காமெடியாக வரும் என்பதை திரையரங்கில் மக்கள் சந்தோஷமாக பார்த்த போது தான் தெரிந்தது, மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தீவிர ரஜினி ரசிகனாக இருந்து அவருடன் பேட்ட, ஜெயிலர், கூலி என படங்களில் நடித்தது வாழ்நாளில் எனக்கு கிடைத்த பாக்கியம். 'கூலி' படத்தில் என்னை பார்த்து, 'பேட்பெல்லோ' என ரஜினி குறிப்பிடும் வசனம், என்னை திரைப்படத்தில் அடையாளப்படுத்தியது.
சண்டை கலைஞராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இது குறித்து அசோசியேஷனில் கேட்ட போது வயது அதிகமாக இருப்பதால் சேர்க்க முடியாது என மறுத்து விட்டனர். முன்னணி இயக்குனர்களிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததால் சினிமா குறித்தும், நகைச்சுவை குறித்தும் அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது.
ரகுவரன், பிரகாஷ் ராஜ் போல சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம். தெலுங்கு, கன்னட படங்களிலும் வாய்ப்புகள் வருகிறது.
பிற மொழி படங்களில் முன்கூட்டியே காட்சியை பற்றி தெளிவாக கூறிவிடுவார்கள். அதனால் மிகவும் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் பணியில் ஈடுபட முடிகிறது. கடின உழைப்பு என்றும் கைவிடாது, பொறுமையாக இருந்தால் வெற்றிக்கான நாள் விரைவில் தேடிவரும்.