நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்'
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பத்தாண்டுகளாக இளசுகளின் டாப் லிஸ்டில் இருந்து வருபவர். நம் பக்கத்து வீட்டுப்பெண் என்று கருதும் வகையில் தாய்மார்களின் மனதிலும் இவருக்கு தனி இடம் உண்டு. ஒட்டுமொத்த இந்தியாவையும் ‛மகாநடி' சாவித்திரியாக கொள்ளை கொண்டார் என்றால் மிகையல்ல. திருமணத்திற்கு பிறகு ‛ரிவால்வர் ரீட்டாவாக' தனது தோட்டா கண்களால் மிரட்டிக் கொண்டு இருப்பவரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக கேள்விகள் தொடுத்த போது...
தமிழ் திரைப்படங்களில் உங்கள் மறுவருகை குறித்து
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய தமிழ் படம் வெளியாவது மகிழ்ச்சி. தெலுங்கில் நடிகர் விஜய்தேவர்கொண்டாவுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறேன். ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸ் செய்தேன். ஒரு ஹிந்தி படமும் செய்தேன். ஒரு மலையாள படமும் நடிக்கிறேன். இது எல்லாம் அடுத்த வருஷம் அடுத்தடுத்து வெளியாகும். எனக்கு எப்பவும் போல படங்கள் வருகிறது.
ரிவால்வர் ரீட்டா பற்றி
இத்திரைப்படம் இதற்கு முன் வந்த ரிவால்வர் ரீட்டா மாதிரி இருக்காது. ஒரு சீரியஸான விஷயத்தை கதாப்பாத்திரங்கள் எப்படி காமெடியா கையாளுறாங்க என்பதே இப்படத்தின் ஒன்லைன். ஓட்டல் மேனேஜராக நடித்துள்ளேன். படத்துல ஆங்காங்கே உள்ள ஒரு சில சண்டை காட்சிகளுடன் டார்க் காமெடியும் முதல் முறையாக முயற்சித்துள்ளேன்.
காந்தா படத்தில் பாக்யஸ்ரீ, மகாநடியில் உங்களைப் பார்த்த மாதிரியே இருக்கிறார் என்கிறார்களே
நேற்று கூட 'காந்தா' படம் பார்க்கும் போது உங்கள் நினைவு வந்தது' என யாரோ சொன்னார்கள். பாக்யஸ்ரீ இப்ப நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறாங்க.
உங்கள் படங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வருவது குறித்து
ஏ.ஐ., ரொம்பவே டார்ச்சரா இருக்கிறது. எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. சோஷியல் மீடியாவில் நிறைய ரீல்ஸ் பார்ப்பதோடு என் கணவருக்கும் அனுப்புவேன். அவரோ 'இது பார்த்தாலே ஏ.ஐ., என்று தெரியலையா' என கலாய்ப்பார். சமீபத்தில் நான் தப்பான போஸ் கொடுத்த மாதிரியான ஏ.ஐ., ஸ்டில் சமூக வலைதளத்தில் வைரலானது. அதைப் பார்க்கும்போது எனக்கே இது நான் தானோ என ஆச்சரியப்படும் வண்ணம் துல்லியமாக இருந்தது. மனிதர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தற்போது மனிதர்களையே திரும்பத் தாக்குகிறது.
கணவர் உங்கள் திரைப்படங்களை விமர்சிப்பது உண்டா
அவருக்கும் சினிமாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனாலும் என்னை விட நிறைய திரைப்படங்கள் பார்ப்பார்; கருத்துக்கள் பகிர்வார்; ஒருபோதும் கடும் விமர்சனம் செய்ய மாட்டார். ரொம்ப ஸ்வீட்டாக என் நடிப்பை விவரிப்பார். சாணிக்காகிதம் படத்தில் நான் கொடூரக்கோலத்தில் இருந்தபோதும் அவருக்கு பிடித்து இருந்தது. ஆனால் என் அக்காவோ என் நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்வாள்.
திருமணத்துக்கு முன்பும், பின்பும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்
எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. என் 15 ஆண்டுகால காதலரைத் தான் கரம் பிடித்துள்ளேன். அதனால் தான் என்னவோ கல்யாண வாழ்க்கை எனக்கு பெரிய வித்தியாசமாக தெரியவில்லை.
கதை தேர்வு செய்யும் விதம்
ஒரு திரைப்படத்திற்கு ஆன்மாவே கதை தான் என ஆணித்தரமாக நம்புகிறேன். கதை கேட்கும் போது எனக்கான ரோல் கனெக்ட் ஆகிறதா என பார்ப்பேன். திரைக்கு முன்னும், பின்னும் யாருடன் இணைந்து பணியாற்ற போகிறோம் என்பதெல்லாம் அடுத்த பட்சம் தான்.
உங்களின் கனவு கதாப்பாத்திரம்
எப்போதும் என்னுடைய கதாப்பாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்புவேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் நினைத்து பார்க்காத அளவு நல்ல கதைகள் வந்திருக்கின்றன. இதற்காக பெரிய பிளான் எதுவும் பண்ணியதில்லை. இந்த படத்திலும் சரி, இயக்குநர் மிஷ்கின் உடன் நடிக்கும் படத்திலும் சரி இதுவரை பார்க்காத கீர்த்தி சுரேஷை பார்ப்பீர்கள்.
யுனிசெப் துாதரானது பற்றி
யுனிசெப் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அதில் இணைந்துள்ளது பெருமையாக உள்ளது. இதைத் தாண்டியும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். என் சார்பில் குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று, அடுத்த ஆண்டு அமையலாம் என்றார்.