சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை செம்புத் தகடுகள் என்று கூறி சீரமைப்புப் பணிகளுக்காக சென்னைக்கு கொண்டு சென்ற விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் செம்புத் தகடுகள் என்று சான்றிதழ் கொடுத்த சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் திருவாபரணம் கமிஷனர் பைஜு, முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார் , திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்களான வாசு, பத்மகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் போத்தி, அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுத்து உருக்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த தகடுகளில் மீண்டும் சிறிது தங்க முலாம் பூசி அதை பல்வேறு செல்வந்தர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று பூஜை நடத்தி பணமும் வசூலித்துள்ளார்.
அந்த வகையில் சென்னையில் நடிகர் ஜெயராமின் வீட்டுக்கும் இதேபோல் தங்கத் தகடுகளை கொண்டு சென்று பூஜை நடத்தி பணம் வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் ஜெயராமிடமும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது. இந்த வழக்கில் இவரை சாட்சியாக சேர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஜெயராமிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயராம். நான் ஐயப்பனின் தீவிர பக்தன் 50 வருடங்களாக சபரிமலைக்கு சென்று வருகிறேன் அந்த வகையில் தான் தங்க தகடு பூஜையில் ஒரு பக்தனாக கலந்து கொண்டேன். இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். இதனால் ஏற்படும் விளைவுகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.