பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை
1980களில் முன்னணி பாலிவுட் நடிகையாக இருந்தவர் தேபா ஸ்ரீ ராய். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் நடன கலைஞர், நடன இயக்குனர், விலங்கு ஆர்வலர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்டவர். குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் சகோதரி மகள்.
வங்க படங்களில் நடித்து வந்தவர் அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்தார். 'உனிஷே அப்ரில்' என்ற வங்க மொழி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.
இவர் நடித்த ஒரே தமிழ் படம் 'மனைவி ரெடி'. இதனை பாண்டியராஜன் இயக்கி நடித்தார். பாண்டியராஜன் அவருக்கு சிந்தாமணி என்று பெயர் சூட்டினார். இவர்களுடன் தங்கவேலு, மனோகர், பசி நாராயணன், மனோரமா, குமரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார், அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார்.
இந்த படம் வெற்றி பெற்றது, சிந்தாமணியின் நடிப்பும் பேசப்பட்டது. ஆனால் அதன்பின் ஏனோ அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.