உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம்

சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம்

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைாவல் மும்பையில் காலமானார். பாலிவுட்டின் எவர்கிரீன் ஸ்டார்களில் இவரும் ஒருவர். ‛ஹீ மேன் ஆப் பாலிவுட்' என அழைக்கப்படும் தர்மேந்திரா நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையோடு நெடுங்காலமாக பாலிவுட்டை கலக்கி வந்தார். சினிமா டூ அரசியல் என அவர் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை பார்க்கலாம்...

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன் சிங் தியோல் மற்றும் சத்வந்த் கவுர் ஆகியோருக்கு டிசம்பர் 8ம் தேதி 1935ம் ஆண்டு தர்மேந்திரா பிறந்தார். கதாநாயகனுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர் தரம்சிங் தியோல் என்ற இயற்பெயர் கொண்ட தர்மேந்திரா.


அறிமுகம்
1954ல் தனது 19வது அகவையில் பிரகாஷ் கவுர் என்பவரை மணம் முடித்தார். திரைத்துறைக்கு வரும் முன்பே சன்னி தியோல், பாபி தியோல் என்ற இரண்டு மகன்கள் அவருக்கு இருந்தனர். தேசிய அளவில் புகழ் பெற்ற பிலிம் பேர் பத்திரிகையால் வழங்கப்பட்ட நியூ டேலண்ட் அவார்டு விருதினை பெற சென்ற தர்மேந்திரா, அங்கு அவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்று, தனது சொந்த மாநிலமான பஞ்சாபிலிருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் அந்தப்படம் தயாரிக்கப்படாததால் அந்த வாய்ப்பு அவருக்கு கிட்டாமல் போனது.

பின்னர் 1960ல் வெளிவந்த தில் பீ தேரா ஹம் பீ தேரே என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக ஹிந்தி திரைப்படத் துறையில் தடம் பதித்தார். தொடர்ந்து பாய் ப்ரண்ட், சூரத் அவுர் சீரத், அன்பத், ஷாதி, பந்தினி, பே கானா, பூஜா கே பூல், ஹகீகத், ஆயீ மிலன் கீ பேலா, மைன் பீ லட்கீ ஹுன் ஆகிய படங்களில் அன்றைய முன்னணி நாயகிகாளான நூதன், மீனாகுமாரி, சாய்ரா பானு, மாலா சின்ஹா ஆகியோருடன் இணைந்து நடித்து 1960களில் பிரபல நடிகராக வலம் வரத் தொடங்கினார்.


தொடர்ந்து காதல் மற்றும் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த தர்மேந்திராவை ஒரு 'ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய முதல் திரைப்படம் பூல் அவுர் பத்தர். 1966ல் வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்ததோடு, அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது தர்மேந்திராவுக்கு கிடைக்க பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படமாகவும் அமைந்திருந்தது.

இந்தியா முழுக்க கொண்டாடிய ஷோலே


அதிக செல்வாக்கு மிக்க, எக்காலத்திலும் மிகச் சிறந்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ஷோலே திரைப்படம் இவரது கலைப்பயணத்தில ஒரு முக்கிய மைல் கல் எனலாம். இரண்டு நாயகர்களில் ஒருவராக வீரு என்ற கதாபாத்திரத்தில் தோன்றி, தனது முழு ஆக்ஷன் நடிப்பை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றிருந்தார் நடிகர் தர்மேந்திரா. ஹிந்தி மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்தபடம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

வாழ்க்கை துணையான ஹேமமாலினி


தும் ஹஸீன் மே ஜவான், ஷராபத், நயா ஜமானா, சீதா அவுர் கீதா, ராஜா ஜானி, ஜுக்னு, தோஸ்த், பத்தர் அவுர் பாயல், ஷோலே, சரஸ், மா, ட்ரீம் கேர்ள், ஆஸாத் என 1970களில் எண்ணற்ற படங்களில் நடிகை ஹேம மாலினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பெற்ற நடிகர் தர்மேந்திரா, 1980ல் அவரை மணமுடித்து தனது வாழ்க்கைத் துணையாகவும் ஆக்கிக் கொண்டார். இந்த தம்பதியருக்கு ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தயாரிப்பாளர்
1983ம் ஆண்டு விஜய்தா பிலிம்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, தனது முதல் மகன் சன்னி தியோலை நாயகனாக அறிமுகம் செய்து வைத்து பேத்தாப் என்ற படத்தை தயாரித்தார் தர்மேந்திரா. படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, அந்த ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய இரண்டாவது திரைப்படமாகவும் தேர்வானது. பின்னர் 1995ல் பர்ஸாத் என்ற திரைப்படத்தை தயாரித்து தனது இரண்டாவது மகன் பாபி தியோலையும் நாயகனாக்கி அழகு பார்த்தார் தர்மேந்திரா.

அரசியலிலும் முத்திரை
2004 முதல் 2009 வரை உள்ள காலகட்டங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பார்லிமென்ட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றி, ஒரு அரசியல்வாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் நடிகர் தர்மேந்திரா.

ஹீ மேன் ஆப் பாலிவுட்
ஆறு தசாப்தங்களுக்கும் மேல் கலையுலகின் பல்வேறு தளங்களில் பயணித்து ஹீ மேன் ஆப் பாலிவுட் என அழைக்கப்படும் தர்மேந்திரா ஏறக்குறைய 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

வாரிசுகளும் நடிகர்கள்


தர்மேந்திராவின் முதல் மனைவி பெயர் பிரகாஷ் கவுர். இரண்டாவதாக பிரபல நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். சன்னி தியோல், பாபி தியோல், விஜீதா தியோல், அஜீதா தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல் என மொத்தம் 6 பிள்ளைகள் தர்மேந்திராவுக்கு உள்ளனர். இவர்களில் பாபி தியோல் தற்போது தமிழ் படங்களிலும் நடிக்கிறார். இஷா தியோல் தமிழில் ‛ஆயுத எழுத்து' படத்தில் நாயகியாக நடித்தார்.

விருதுகள்
நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முகத் தன்மையோடு நெடுங்காலமாக பாலிவுட்டை ஆட்சி செய்து வந்த தர்மேந்திரா, சினிமா உலகில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அவரை பாராட்டும் வண்ணம் அவருக்கு 2012ம் ஆண்டு மத்திய அரசால் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் பல பலிம் பேர் விருது மற்றும் பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.


பயோடேட்டா
இயற்பெயர் : தரம் சிங் தியோல்
சினிமா பெயர் : தர்மேந்திரா
பிறப்பு : 08 - டிசம்பர் - 1935
இறப்பு : 24 - நவம்பர் 2025
பிறந்த இடம் : நஸ்ராலி - கன்னா தாலுகா - லூதியானா மாவட்டம் - பஞ்சாப் மாநிலம்
சினிமா அனுபவம் : 1960-லிருந்து
துணைவியர் : பிரகாஷ் கவுர் (1954) - ஹேமா மாலினி (1980)
குழந்தைகள் : சன்னி தியோல், பாபி தியோல் (மகன்கள்) - விஜீதா தியோல் - அஜீதா தியோல் - ஈஷா தியோல் - அஹானா தியோல் (மகள்கள்)
பெற்றோர் : கேவல் கிஷன் சிங் தியோல் - சத்வந்த் கவுர்
புனைப்பெயர் : தரம் - ஹீ மேன் ஆப் பாலிவுட்
விருதுகள் : 2012ம் ஆண்டு இந்திய அரசால் பத்மபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !