சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது'
தமிழ் சினிமாவில் சில படங்கள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அது போல சில படங்கள் அதிக பரபரப்பு இல்லாமல் ஓடுவதும் தெரியாது. அப்படி ஒரு படமாக 'ஆண்பாவம் பொல்லாதது' படம் அமைந்துள்ளது. கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா ராஜ்குமார், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்த இந்தப் படம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியானது.
கணவன், மனைவிக்கிடையேயான சண்டை, பிரிவு, வழக்கு என பரபரப்பான அதே சமயம் சுவாரசியமான திரைக்கதை இந்தப் படத்திற்கு உதவி செய்தது. இளம் ரசிகர்கள் இந்தப் படத்தைத் தியேட்டர்களுக்கு வந்து பார்த்துள்ளனர். பெரிய விளம்பரம் இல்லாமல் இந்த வருடத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற, “டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன், மாமன்,' ஆகிய படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேர்ந்துள்ளது.
இம்மாதிரியான வளரும் நடிகர்கள் நடித்த சிறிய படங்களின் வரவேற்புதான் தமிழ் சினிமாவை வாழ வைக்கும். இந்த வருடத்தில் இப்படியான படங்கள் அதிகம் வரவில்லை என்றாலும் ஒரு சில படங்களாவது இப்படி வந்து வரவேற்பைப் பெறுகிறதே என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான்.