தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன்
சென்னையில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் கங்கை அமரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: 'செம்பருத்தி' படத்தில் வரும் 'நிலா காயும் நேரம் சரணம்' பாடலில் ரோஜாவை ரசித்தேன். இப்போது லெனின் பாண்டியன் படத்தில் எனக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது. ரொம்ப வழியாதீங்க என கலாய்த்தார்.
அண்ணன் இளையராஜா பாடல்களை மக்கள் இன்றும் விரும்பி கேட்பதால் புதுப்படங்களில் அவர் பாடல்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கு அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கினால், அவருக்கு நன்றி சொன்னால் எந்த பிரச்னையும் இல்லை. நானும், அண்ணனும் இல்லாததால் இப்போது மெலோடி பாடல்கள் குறைந்து விட்டது.
தன்னிடம் வந்து அனுமதி கேளுங்கள் என்று தான் அண்ணன் இளையராஜா சொல்கிறார். இளையராஜாவிடம் கேட்டால் அவர் கொடுத்து விடுவார். கேட்காமல் போடுவதால் தான் எங்களுக்கு எரிச்சல் வருகிறது. பாடல்களுக்கு அனுமதி கேட்டு, இளையராஜாவுக்கு நன்றி என போடுங்கள். ஆனால் எங்களை மதிக்காமல் போடுவதால் தான் கோபம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்கை அமரன், ''ஏ.ஐ.,க்கு அடிமையானால் நம் மூலை வேலை செய்யாது. அதில் புகைப்படம் வேறு மாதிரி இருக்கும். ஏஐ.,யை நம்ப கூடாது, நம்ப மாட்டேன் என்று அண்ணன் இளையராஜா சொல்லுவார். ஏ.ஐ.,யில் சிலர் கேவலப்படுத்துவதற்காக இதை செய்கிறார்கள். அதை தடுப்பதற்காக தான் இப்படி செய்கிறோம்.
கடைசி செய்தியாளர் சந்திப்பில் நான் கோபப்பட்டதை பெரிதாக்கி விட்டார்கள். நான் பேசும்போது ஒருவர் இடையில் பேசியதால் கோபம் வந்தது. என்ன நடந்தது என தெரியாமல் என்னை மோசமான ஆளாக ஆக்கி விட்டார்கள்'' என்றார்.